மொபைல் தொலைபேசி மற்றும் இணையம் போன்றவை சக்தி வாய்ந்த கருவிகள் மட்டுமல்ல அவை பெரிய ஆயுதங்களாகவும் இருக்கக்கூடும். ஐ.நா மன்றம் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உருவாகும் வன்முறையைப் பற்றி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த வன்முறை உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே அதே அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது . குறிப்பாக உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தொழில் நுட்பம் நுழையக்கூடிய இந்த நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஐ.நா கூறுகிறது.
இளம் பிரிட்டிஷ் நடிகை, எம்மா வாட்சன் , ஐநா மன்ற கூட்டம் ஒன்றில், பாலின சமத்துவம் குறித்துப் பேசியபோது, அவர் தன்னை உலகளாவிய கும்பல் ஒன்றின் தொடர் தொந்தரவுக்கு இலக்காவோம் என்று நினைத்திருக்கமாட்டார்.
அதேபோல வீடியோ விளையாட்டு ஒன்றை உருவாக்கிய ஸோ க்வின்னும் பெண் எதிர்ப்பாளர்களின் வெறுப்புப் பிரசாரத்துக்கு இலக்கானார். அவர் உருவாக்கிய வீடியோ விளையாட்டு ஒன்றைப்பற்றி சாதகமாக ஊடகங்களில் செய்திகள் வரவேண்டும் என்பதற்காக உடலுறவில் ஈடுபட்டதாக அவரது முன்னாள் ஆண் நண்பர் பொய்யான குற்றச்சாட்டு ஒன்றைக் கூற, அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக, இணைய வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவர்கள் , பெண்களுக்கு எதிரான வெறுப்பைக்கக்கும் கருத்துக்களை வெளியிட்டு அவருக்கு கடும் தொல்லை தந்தனர். இதில் அவரைப் பாலியல் வல்லுறவு செய்வோம், கொலை செய்வோம் என்ற மிரட்டல்களும் அடங்கும்
ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்சும் அவரது நிர்வாணப் படங்கள் கசியவிடப்பட்டு இணைய உலகில் பரவிவிடப்பட்டதை அடுத்து இதே போல பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு இலக்கானார்.
இது போன்ற உதாரணங்கள் ஏராளம்.
தொலைதொடர்பு இணைப்பு என்பது எல்லா இடங்களிலும் கிடைக்கும் தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பமும், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஊறு விளைவிக்கும் ஒரு கருவியாகிவிட்டது என்று எச்சரிக்கிறது ஐ.நா மன்றம்
உலகெங்கும் ஏற்கனவே பல கோடிக்கணக்கான பெண்கள் , அவர்கள் பெண்களாக இருப்பதலாயே , பாலியல் ரீதியான வீட்டிற்குள் நடக்கும் வன்முறைக்கு இலக்காகிறார்கள்.
இப்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி என்பது அத்தகைய வன்முறையை செய்ய புதிய வழிகளை தந்துள்ளது.
இது இந்தப் பிரச்சனை குறித்து "உலக அளவில் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம்" என்கிறது ஐ.நா.
பெண்களுக்கெதிரான வன்முறை
3ல் ஒரு
பகுதி பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் உலகெங்கும் ஏதோவொரு வித வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.
- 73% பெண்கள் இணையத்தில் பாலியல் தொடர்பான வன்முறையை சந்தித்திருக்கிறார்கள்.
- 5ல் ஒருவர் இணையம் தங்களுக்குப் பொருத்தமற்றது என்று கருதுகிறார்கள்.
- 27மடங்கு பெண்கள் ஆண்களைவிட இணையத்தில் தொல்லைக்கு ஆளாகக்கூடும்
இணைய வெளியில் இது போன்ற மோசமான நடத்தைகளில் 95 சதவீதம் பெண்களை நோக்கியதாகவே இருப்பதாக ஐநா கணிக்கிறது.
இணையம், சுதந்திரத்தைத் தரும் என்று முதலில் வந்த சாதகமான உறுதிமொழிகளை எல்லாம் இந்த இணைய வெளி வன்முறை குலைத்துவிட்டது. பல சந்தர்ப்பங்களில் இது அநாமதேயக் கொடூரத்தையும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிராக ஊறுவிளைவிக்கும் நடத்தைகளையும்தான் ஊக்குவிக்கிறது என்கிறார் ஐநா பெண்கள் அதிகாரி பும்ஸிலே ம்லாம்போ இங்குக்கா.
இணைய வெளியில் நடக்கும் பாலியல் சார்ந்த வன்முறை முன்னேறிய முதல் உலக நாட்டுப் பிரச்சனை அல்ல என்று கூறும் தொழில் நுட்ப வல்லுநர்கள், மொபைல் கருவிகளும், இணையமும் உலக அளவில் பரவும் நிலையில், இந்த வன்முறையும் கூடவே பரவும் போக்கை சுட்டிக்காட்டுகின்றனர். இதை சமாளிப்பதும் எளிதானதல்ல. ஏனென்றால் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இரட்டை முனை கொண்ட கத்திகள் - அவை பாலியல் வன்முறையை பிரயோகிப்பதற்கும் பயன்படும், பெண்கள் பாதுகாப்பாக உணரவும், சுதந்திரமாக இருக்கவும் பயன்படும்.
மூவரில் ஒரு பெண் பாதிக்கப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனம் பெண்களுக்கெதிரான ( வீட்டில் நடக்கும் வன்முறை, வீதிகளில் நடக்கும் தொல்லை, பாலியல் வர்த்தகம், கற்பழிப்பு மற்றும் பெண்சிசுக்கொலை போன்ற) வன்முறையை, "கொள்ளை நோய் போன்ற அளவிலான ஒரு உலக சுகாதாரப் பிரச்சனை" என்று கூறுகிறது.
இந்தக் கொள்ளை நோயை சமூக ஊடகங்கள் மேலும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன.
"இணையம் எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அதே போலத்தான் அதனுடன் இணைந்து வரும் வன்முறையும். இந்த வன்செயல்களில் ஈடுபடுபவர்கள் பூகோள அல்லது பௌதிக எல்லைகளால் கட்டுப்படவில்லை" என்கிறார் பிரிட்டனின் முன்னாள் அரச தலைமை வழக்கறிஞரும் வீட்டிற்குள் நடக்கும் வன்முறைக்கெதிரான கூட்டணி என்ற அமைப்பின் நிறுவனருமான, பேட்ரிஷியா ஸ்காட்லண்ட் அம்மையார்.
அநாமதேயத்தன்மை, எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய நிலை, தூரத்திலிருந்தே ஒரு செயலை செய்யக்கூடிய நிலை மற்றும் தானாக இயந்திரகதியில் செய்யக்கூடிய நிலை ஆகியவற்றை தொழில்நுட்ப சார்ந்த பாலியல் வன்முறையை மற்ற வன்முறைகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் நான்கு அம்சங்களாக முற்போக்கு தொடர்புக்கான சங்கம் என்ற டிஜிட்டல் தொழில்நுட்ப ஆய்வமைப்பு கூறுகிறது.
ஆனால் வன்முறையான இணைய நடத்தை என்பதில் , இணைய வெளியில் தொந்தரவு செய்வது மற்றும் பொதுவெளியில் அவமானப்படுத்துவது , உடல் ரீதியாக ஊறு விளைவிப்பது போன்றவை அடங்கும். இணையம் , இணைய உலக வன்முறையை உண்மையான வன்முறையாக மாற்ற ஒரு கருவியாக உருவெடுக்கலாம்.
வாஷிங்டனிலிருந்து இயங்கும் வீட்டிற்குள் நடக்கும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் தேசிய வலையமப்பு நடத்திய ஒரு ஆய்வில், இது மாதிரியான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் 89 சதவீதத்தினர் ஏதோ ஒருவித துஷ்பிரயோகத்தை தொழில்நுட்பம் மூலமாகவும் அதிலேயே கூட பலவித தளங்கள் மூலமாகவும் எதிர்கொண்டதாகக் கூறுவதாகத் தெரியவந்திருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இளையவர்களாகவே இருப்பர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
இணைய வன்முறை
18லிருந்து 24வரை
தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் வன்முறை அபாயத்தை எதிர்கொள்ளும் வயதினர்
76%
14-24 வயது பெண்கள் இணைய வன்முறை ஒரு பாரிய பிரச்சனையாகக் கூறுகின்றனர்
- 56% பேர் ஏதோ ஒரு வடிவில் தொல்லைக்குள்ளாகியதாக கூறுகின்றனர்
- 26% பேர் பின் தொடரப்பட்டனர்
- 25% பேர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகினர்
- 5% பேர் இணையத்தில் நடந்த ஏதோ ஒன்று தங்களை உடல் ரீதியான ஆபத்துக்கு இட்டுச்சென்றதாகக் கூறுகின்றனர்
குறும்புகள் வேண்டாம்
சமூக ஊடகங்களில் பிரபலமான பெண்களுக்கெதிராக எழுந்த தொடர் வன்முறை இந்தப் பிரச்சனை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உதவியது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஜென்னிபர் லாரன்ஸ் அல்லது எம்மா வாட்சன் மட்டுமல்ல. கரோலைன் க்ரியாடொ பெரஸ்,பிரபலமான பெண்களின் படங்களை பிரிட்டிஷ் கரன்சி நோட்டுகளில் மேலும் அதிகமாகப் போடுமாறு பிரிட்டிஷ் அரசிடம் மனுசெய்ததற்காக இணையத்தில் கடுமையாக தாக்கப்பட்டார்.சமூக ஊடகங்களில் அவருக்குக் கடுமையான தொந்தரவு தந்தனர்.
வன்முறை வடிவங்கள்
- 1. இணைய தொந்தரவு மோசமான குறுஞ்செய்திகள் அனுப்புவது, எங்கிருக்கிறார் என்பதை அறிந்து கண்காணிப்பது.
- 2. துணைவர் தொடர்பான வன்முறைஉதாரணமாக, அந்தரங்க தகவல் பரிமாற்றங்களை வெளியிடுவதாக மிரட்டுவது- அதாவது, பழிவாங்கும் விதத்தில் ஆபாச வெளியீடு
- 3. கலாசார ரீதியில் நியாயப்படுத்தப்படும் வன்முறை பாலியல் ரீதியான ஜோக்கை அனுப்புதிலிருந்து , பாலியல் வல்லுறவை ஊக்குவிக்கும் பேஸ்புக் குழுவைத் தொடங்குவது வரை
- 4. பாலியல் தாக்குதல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களை ஒரு சூழலுக்கு வரவழைப்பது. அந்தச் சூழல் பாலியல் வல்லுறவுக்கு அல்லது பிற உடல் சார்ந்த வன்முறைக்கு வழிவகுக்கும்
ஆனால் பெரும்பாலான நாடுகளில் சட்டம் இல்லாத நிலையை சமாளிக்கவேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். அதே போல இணையத்தில் மிரட்டல் என்பதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாத நிலையையும் எதிர்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இணைய மிரட்டல்களை சிலர் "பாதிப்பு ஏற்படுத்தாத ஓய்வறை அரட்டை " அல்லது " சிறுவர்கள் செய்யும் குறும்பு" என்பது போல எடுத்துக்கொள்வது காணப்படுகிறது என்று மேரிலாண்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேனியல் சிட்ரோன் கூறுகிறார்.
சில சமூக ஊடகங்கள் இத்தகைய பிரச்சனையைக்கையாள " ரிப்போர்ட் பொத்தான்" என்ற வசதியை ஏற்படுத்தியிருப்பது ஒரு அபாயகரமான உண்மை உலகப் பிரச்சனைக்கு ஏதோ இணையத்தில் தரப்படும் பிளாஸ்திரி போன்றதொரு விஷயம் என்று அவர் கூறுகிறார்.
பழிவாங்கும் போக்கில் ஆபாசப் படங்களை பிரசுரிப்பது போன்றவற்றை கிரிமினல் குற்றங்களாக்கவேண்டும் என்று அவர் அமெரிக்க அரசிடம் கோரியிருக்கிறார்.
ஆனால் அவரது இந்தக் கருத்துக்கு எதிர் நிலை எடுப்பவர்கள், இது கருத்துரிமையைப் பாதிக்கும் என்று வாதாடுகிறார்கள்.
சமூக ஊடக தளங்கள் வன்முறையைக் கண்காணிக்கு நோக்கில், அதில் இடப்படும் கருத்துக்களை முன்கூட்டியே கண்காணிக்க கூடாது என்று நம்புகிறார் எலெக்ட்ரானிக் ஃப்ராண்டியர் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் இயக்குநரான ஜில்லியன் யார்க். அது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று அவர் கூறுகிறார். இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் தணிக்கை அதிகாரிகளிடம் தங்களுக்குப் பிடிக்காத கருத்தையெல்லாம் தணிக்கை செய்ய சில குழுக்கள் முயல்வார்கள் என்று அவர் கூறுகிறார்.
ட்விட்டர் போன்ற தளங்களில் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்பவர்களே பொதுவாக தங்களை ஒழுங்குபடுத்திக்கொள்கிறார்கள் என்று கூறுகிறார் இணைய வல்லுநர் ஜொனாதன் பிஷப். ஆனால் இது போன்ற சுயகட்டுப்பாடுகள் தோல்வியடையும்போது , சட்டங்கள் தேவைப்படும் என்று அவர் கூறுகிறார்.
இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், கைத்தொலைபேசி நிறுவனங்கள், சமூக வலை தளங்கள் போன்றவை டிஜிட்டல் வாயில்காப்போராக பணியாற்றவேண்டும் என்று சமீபத்திய ஐநா ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆனால் பொதுவாக இணைய தள வன்முறையால் பாதிக்கப்படும் ஐந்து பெண்களில் ஒருவர் , இணையத்தில் பாலியல் வன்முறை என்பது சட்டபூர்வமாக தண்டிக்கப்படக்கூடிய நிலை இல்லாத நாடுகளில்தான் வாழ்கிறார்கள் என்பதை வைத்துப் பார்க்கும்போது நிலைமை பிரகாசமாக இல்லை.
சட்டரீதியான தண்டனை
5ல் ஒரு
இணைய பெண் பயன்பாட்டாளர்கள் இணையத்தில் பாலியல் வன்முறை தண்டிக்கப்படாத நாடுகளில் வசிக்கிறார்கள்
- 74% நாடுகள் நீதிமன்றம் அல்லது போலிஸ் போன்ற அமைப்புகள் மூலம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகின்றன.
- 65% பாதிக்கப்பட்ட பெண்கள் இணைய வன்முறையைப் பற்றி புகார் சொல்வதில்லை. சமூகப் பின் விளைவுகளுக்கு பயந்து.
தொழில் நுட்பமே கூட்டாளியாக...
இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில், இது போன்ற பெண்களுக்கெதிரான இணைய வன்முறையை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தையே நாடும் போக்கு காணப்படுகிறது.
அக்டோபரில், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் கைகளில் கறுப்பு மைகளைப் பூசி அதை செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் தீயாகப் பரவவிட்டனர். இதற்கு கறும்புள்ளி இயக்கம் என்று பெயரிட்டனர்.
இந்தப் பிரசார இயக்கம் தொடங்கிய ஒரு நாளிலேயே சுமார் 6,000 பாதிக்கப்பட்ட பெண்கள் இது போல தங்கள் கைகளில் சிறிய கறுப்புப் புள்ளிகளை வரைந்து, படமெடுத்து பிரசுரித்தனர். இவர்களது இந்தப் படங்கள் மூலம் ஆறு பெண்களுக்கு உதவி செய்ய முடிந்தது. ஆனால் இந்த மாதிரியான எதிர்ப்புகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவாது, மாறாக அவர்களை மிரட்டுபவர்களுக்கே மேலும் வாய்ப்புகளைத் தரும் என்று இது போன்ற வன்முறைகளுக்கெதிராக செயல்படும் குழுக்கள் கூறின.
No comments:
Post a Comment