மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 நோயாளிகள் உடல் கருகி பலியாகினர். ரஷ்யாவின் தவோரோநெல் பகுதியில் உள்ள அல்பெரோவ்கா கிராமத்தில் மனநல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனையில் 70 நோயாளிகள் மற்றும் நான்கு செவிலியர்கள் இருந்தனர்.
இந்த விபத்தில் படுத்தபடுக்கையாக இருந்த 23 நோயாளிகள் உடல் கருகி பலியாகினர். அவர்கள் அனைவரும் முதியவர்கள். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் 80 வாகனங்களில் வந்த 440 தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வீடுகளில் ஏற்படும் தீ விபத்திலும் பலர் ஆண்டுதோறும் பலியாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 37 பேர் பலியாகினர். முன்னதாக அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தீ விபத்தில் 38 பேர் பலியாகினர். 2009ம் ஆண்டு பெர்ம் நகரில் உள்ள நைட்கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 156 பேர் உடல் கருகி பலியாகினர்.


No comments:
Post a Comment