காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் நேருவையும், சோனியா காந்தியையும் தாறுமாறாக விமர்சித்து கட்டுரைகள் வெளியிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்கட்சியின் 131வது நிறுவன நாளை கொண்டாடும் வேளையில், இவ்விவகாரம் வெளியாகி பெரும் சோதனையாக அமைந்துள்ளது. காங்கிரசின் மும்பை பிராந்தியத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘காங்கிரஸ் தர்ஷன்’ வெளியாகி வருகிறது. இப்பத்திரிகையின் இம்மாத இதழ், கடந்த 15ம் தேதி நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியானது. இதில், எழுதியவரின் பெயரிடப்படாத 2 சர்ச்சைக்குரிய கட்டுரைகள் வெளியாகி உள்ளன.
ஒரு கட்டுரையில், வல்லபாய் படேலை புகழும் வகையிலும், நேருவை விமர்சிக்கும் வகையில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ‘சர்தார் வல்லபாய் படேல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனாலும், அவருக்கும் பிரதமர் நேருவுக்கு இடையேயான உறவு பலவீனமாகவே இருந்து வந்தது. இருவருமே மாறி மாறி ராஜினாமா செய்து விடுவதாக மிரட்டிக் கொண்டே இருந்தனர்’ என கூறப்பட்டுள்ளது. மேலும், ‘சர்வதேச விவகாரங்களில் படேலின் கருத்துக்களை நேரு கேட்டிருக்க வேண்டும். படேலின் தொலைநோக்கு பார்வை கொண்ட கருத்துக்களை நேரு ஏற்றுக் கொண்டிருந்தால், இன்று வரை புகைந்து கொண்டிருக்கும் பல பிரச்னைகள் இல்லாமலே போயிருக்கும்’ என கூறப்பட்டுள்ளது.
1950ம் ஆண்டு திபெத் விவகாரத்தில் சீனாவின் கொள்கை குறித்து படேல், நேருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக் காட்டி, ‘சீனா ஒருபோதும் உண்மையாக இருக்காது எனவும், எதிர்காலத்தில் இந்தியாவின் எதிரி நாடாக மாறும் என்றும் அப்போதே படேல் கூறியிருக்கிறார். அதேபோல, படேல் பேச்சை நேரு கேட்டிருந்தால், இன்று வரை உள்ள காஷ்மீர், சீனா, திபெத் மற்றும் நேபாள பிரச்னைகள் எழுந்திருக்காது. காஷ்மீர் விவகாரத்தை ஐநாவுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என படேல் கூறியதையும் நேரு கேட்கவில்லை. நேபாள விவகாரத்திலும் படேலை நேரு புறக்கணித்தார்’ என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு கட்டுரையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றியும் விலாவரியாக விளக்கப்பட்டுள்ளது. அவர் விமானப் பணிப்பெண் ஆக வேண்டுமென்பதையே வாழ்க்கை லட்சியமாக கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிட்டுள்ளது.
குறுகிய காலத்தில் சோனியா எப்படி கட்சி தலைமையை பிடித்தார் என்பதை விளக்கிய அந்த கட்டுரையில், ‘காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராக 1997ல் சேர்ந்த சோனியா அடுத்த 62 நாளில் கட்சி தலைவராகி விட்டார். ஆனாலும் அவர் அரசு அமைக்கும் முயற்சியில் தோல்வி கண்டார்’ என கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது 131வது நிறுவன நாளை நேற்று கொண்டாடிய நிலையில் இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்டுரை எழுதியவர் வரலாறு தெரியாமல் குழப்பி உள்ளார் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்தாலும், இது பற்றி தீவிரமாக விசாரிக்கப்படும் என கட்சி மேலிடம் கூறியுள்ளது.
‘எனக்கு எதுவும் தெரியாது’
மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், பத்திரிகையின் ஆசிரியருமான சஞ்சய் நிரூபம் கூறுகையில், ‘இந்த தவறுக்கு முழு பொறுப்பேற்கிறேன். பத்திரிகையின் தினசரி நடவடிக்கையில் நான் பங்கேற்பதில்லை. அதனால், இந்த கட்டுரையை யார் எழுதியது, எப்படி வெளியானது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இனிமேல் இதுபோன்ற தவறுகள் ஏற்படாது. கட்டுரையில் வெளியான தகவல்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத தவறான தகவல்கள் ஆகும்’ என விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜ தலைவரும், மத்திய அமைச்சருமான ஜிதேந்தர் சிங் கூறுகையில், ‘நேருவின் கொள்கை பற்றிய இத்தகைய விமர்சனங்கள் ஏற்கனவே பலமுறை எழுந்துள்ளது. பாஜ தவிர, நேருவின் நெருங்கிய நண்பர்களை பலர் தங்களது புத்தகங்களில் விமர்சித்துள்ளனர்’ என்றார்.
ஆசிரியர் நீக்கம்
காங்கிரஸ் பத்திரிகையிலேயே கட்சித் தலைவர் பற்றிய விமர்சனங்கள் வந்ததை தொடர்ந்து, அதன் பொறுப்பாசிரியர் சுதிர் ஜோஷி நீக்கப்பட்டுள்ளார். மேலும், அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment