Latest News

சுனாமி அடிச்சுப் போய் 11 வருஷம் ஆச்சு;எங்களுக்கு வீடு இன்னும் கிடைக்கலை - கதறும் கடலூர் மீனவ மக்கள்!


கடலூர் மாவட்டத்தில் 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும் வீடுகளை இழந்த மீனவ மக்கள் பலர் அரசின் சுனாமி குடியிருப்பு வீடுகள் கிடைக்காமல் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதியன்று கடலூரையே புரட்டிப் போட்ட சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் முன்வந்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும், புதிய படகுகள் வழங்கி அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உதவிக்கரங்கள் நீட்டப்பட்டன.

அதன்படி, கடலூர் அருகே ஏணிக்காரத் தோட்டத்தில் கிட்டதட்ட 1000 வீடுகள் தொண்டு நிறுவனங்களால் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு தற்போது வசித்து வருகின்றனர். இதேபோல, மீனவர்களுக்கு அரசு சார்பில் ராஜீவ் காந்தி தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், கடலூர் முதுநகர் செல்லக்குப்பம் குட்டியாண்டவர் கோயில் அருகே 538 வீடுகள் கட்டும் பணி 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. இதில், பெரும்பாலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டபோதிலும், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. மேலும், கிட்டதட்ட 300 பேருக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படாததால் அந்த வீடுகள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புகலிடமாக உள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் செல்லங்குப்பம் காலனி அருகே சுமார் 60 வீடுகள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் அங்கு வீடுகள் கட்ட முடியாத நிலை உள்ளது. 11 ஆண்டுகள் கடந்த பின்னரும் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் கூட தொடங்கப்படவில்லை. எனவே, அரசு வீடுகளை இழந்தவர்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மீனவ மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.