தன் குழந்தைக்கு இங்கே பாதுகாப்பில்லை என்று என் மனைவி கருதுகிறார். இந்தியாவிலிருந்து நாம் வெளியேறவேண்டுமா என்றும் அவர் கேட்கிறார்.’ - இதுதான் அமீர் கான் சொன்னது. இந்தக் கருத்தை ஏற்க விரும்பாதவர்கள் எப்படியெல்லாம் எதிர்வினை புரிந்திருக்கலாம்?
உங்கள் அச்சம் அதீதமானது, நீங்கள் சொல்வது சரியல்ல என்று மறுத்திருக்கலாம். நீங்கள் சொல்வதைப் போல் இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடல்ல என்று வாதிட்டிருக்கலாம். இப்படி நீங்கள் கருதவேண்டிய சூழல் ஏன் வந்தது என்று பொறுமையாக ஆராய்ந்திருக்கலாம். வெறுமனே புறக்கணித்திருக்கலாம். ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் ஆதரவாளர்கள் இதை எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார்கள் தெரியுமா?
* ட்விட்டர், ஃபேஸ்புக் என்று சமூக வலைத்தளங்களில் அமீர்கான் தனிப்பட்டமுறையில் அவமரியாதை செய்யப்படுகிறார்.
* அமீர்கான் மீதான தாக்குதல் அவர் மதத்தின் மீதான தாக்குதலாக விரிவடைந்திருக்கிறது.
* கான்பூர் நீதிமன்றத்தில் அமீர்கான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இ.த.ச. பிரிவு 124 ஏ (தேசத்துரோகம்), 153 ஏ (வெவ்வேறு பிரிவினருக்கிடையே மத ரீதியிலான பகைமையை ஏற்படுத்த முயலுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.
* அமீர் கானுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுவிட்டன.
* அவருடைய உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுவிட்டன.
* காவல்துறையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
* அவருடைய வீட்டு வாசலில் கூடி நின்று முழக்கங்கள் வைத்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
* அமீர் கான் பிராண்ட் அம்பாசிடராக விளங்கும் ஸ்நாப் டீல் நிறுவனத்தைப் புறக்கணிக்குமாறு இணையப் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பலர் தங்கள் மொபைலில் இருந்து ஸ்நாப்டீல் ஆப்ஸை அகற்றியிருக்கிறார்கள். கோக், டாடா ஸ்கை, டைட்டன் ஆகியவை புறக்கணிப்பட்ட அல்லது மிரட்டப்பட்ட மற்ற நிறுவனங்கள்.
* அமீர் கான் இந்தத் தேசத்தை அவமதித்துவிட்டார் என்று அறிவித்துள்ளார் பாஜக தலைவர் மனோஜ் திவாரி.
* உதிரி சம்பவங்களை வைத்து இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடு என்று சொல்லிவிடமுடியாது என்கிறார் ராம் கோபால் வர்மா.
* எந்த நாட்டுக்குப் போகவேண்டும் என்று சொன்னால் ஒரு வழி டிக்கெட் எடுத்துக் கொடுக்கத் தயார் என்று ஆளாளுக்கு முன்வந்து நிற்கிறார்கள்.
* அமீர் கான் இருக்கவேண்டியது இங்கல்ல,பாகிஸ்தானில் என்று சொல்பவர்களின் எண்ணிக்கையை அளவிடமுடியாது.
இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்பது அமீர்கானின் குற்றச்சாட்டு என்றால், அந்தக் குற்றச்சாட்டுக்கான இந்த எதிர்வினைகள் நமக்குத் தெரிவிக்கும் செய்தி என்ன?
அமீர்கான் மட்டுமல்ல, இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்று யார் சொன்னாலும் அவருக்குக் கீழ்வரும் பெயர்கள் சூட்டப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
· காங்கிரஸ்காரர்
· காங்கிரஸிடம் இருந்து ஆதாயம் பெற்றவர் (அ) பெறுபவர் (அ) பெற விரும்புபவர்
· தேசபக்தி அற்றவர்
· நன்றி உணர்ச்சி இல்லாதவர்
· விளம்பரப் பிரியர்
· பிரிவினைவாதி
· கம்யூனிஸ்ட்
· பாகிஸ்தான் குடிமகன்
· தீவிரவாதி (அ) அவருடைய ஆதரவாளர்
ராகுல் பண்டிதா ஒரு எழுத்தாளர். தற்சமயம் அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அமீர்கானைப் போல் இவர் ஒரு முஸ்லிம் அல்ல என்பதுடன் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகளின் துயரங்களை முன்வைத்து அவர்களுடைய வரலாற்றை எழுதி சமீபத்தில் வெளியிட்டவர். இவை போக, இந்துத்துவர்களுக்கு உகந்த சில கருத்துகளை முன்வைத்தவரும்கூட. உதாரணத்துக்குச் சில...
* இந்துத்துவாவைப் பற்றிப் பேசும் அளவுக்கு ராணுவமயமாக்கப்பட்ட இஸ்லாம் குறித்து இங்கு பேசப்படுவதில்லை.
* ஆர்எஸ்எஸ் அமைப்பை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் ஒப்பிடுவது பைத்தியக்காரத்தனமானது.
* எடுத்ததற்கெல்லாம் நரேந்திர மோடியைக் குற்றம்சொல்லும் போக்கே இங்கு வளர்ந்துள்ளது.
காஷ்மிர் பண்டிட்டுகள் பற்றிப் பேசுவதால் அவரை தேசபக்தி அற்றவர் என்று சொல்லிவிடமுடியாது. மோடியை வெறுப்பவர் அல்லர் என்பதால் காங்கிரஸ்காரர் என்றோ இடதுசாரி என்றோ அவரை ஒதுக்கமுடியாது. பெயரில் இருந்தே, இவர் ஓர் உயர்சாதி இந்து என்று தெரிந்துகொள்ளலாம். இத்தனை பீடிகையோடு அவரை அறிமுகம் செய்யவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால் ராகுல் பண்டிதா அமீர் கான் விவகாரத்தில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
· அமீர் கானின் அச்சத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது
· நான் தற்சமயம் அமெரிக்காவில் இருக்கிறேன். ஓர் உயர்சாதி இந்து என்றபோதும் இந்தியா திரும்புவதற்கு அச்சமாக இருக்கிறது
· பெரும்பான்மை இந்துக்களால் சிறுபான்மையினரின் அச்சங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது
· இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்பதை உணர்ந்துகொள்ள நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டியதில்லை.
அமீர் கானை பாகிஸ்தானுக்குத் துரத்திவிடலாம். இந்த ஆய்வாளருக்கு எங்கு வைத்து பாதுகாப்பது?
இன்றைய இந்தியாவை உலுக்கிக்கொண்டிருக்கும் முதன்மை பிரச்னை இதுதான். பெருகிவரும் முரண்பாடுகளை நாகரிகமான முறையில் எப்படிக் கையாள்வது என்று இந்திய அரசுக்குத் தெரியவில்லை. இந்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கும்தான். சில உதாரணங்கள் :
நவம்பர் 16 என்பது இந்தியாவைப் பொருத்தவரை, தேசிய பத்திரிகை தினம். நாகலாந்தைச் சேர்ந்த மூன்று பத்திரிகைகள் (மோருங் எக்ஸ்பிரஸ், நாகாலாந்து பேஜ், ஈஸ்டர்ன் மிரர்) அன்றைய தினத்தில் தங்களுடைய எடிட்டோரியல் பகுதியை வெறுமையாக அச்சிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன. ஏன்? நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலிம் (கப்லாங்) என்னும் தடை செய்யப்பட்ட அமைப்பு பற்றிய செய்திகளை வெளியிட்டதற்காக இந்த மூன்று பத்திரிகைகளுக்கும் அசாம் ரைஃபிள்ஸ் ராணுவ அமைப்பு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அரசாங்கமும் ராணுவமும் விரும்பும் செய்திகளை மட்டுமே பத்திரிகைகள் அச்சிடவேண்டும் என்னும் எழுதப்படாத சட்டம் நிலவுவதையே இந்தச் செய்கை நிரூபிக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களை விட்டுத் தள்ளுங்கள். வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழகத்தின் நிலை என்ன? மதுவிலக்கை முன்வைத்துப் பாடல்கள் இசைத்த தோழர். கோவன்மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். ’என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்று தலைப்பிட்டு அவர் ஆட்சிக்காலத்தைத் தக்க ஆதாரங்களுடன் விமரிசித்து கட்டுரை வெளியிட்டதற்காக ஆனந்த விகடன்மீது அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இதுதான் இன்றைய நடைமுறை. அரசாங்கம் தனக்கு விரும்பாத எதுவொன்றையும் அனுமதிப்பதில்லை. முரண்பாடுகளை அது ஏற்பதில்லை. மாறுபட்ட கருத்துகளை அனுமதிப்பதில்லை. கருத்து சுதந்தரம் என்பது அரசும் அதிகார வர்க்கமும் விரும்பும் கருத்துகளுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களோடு இசைந்து செல்பவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ள ஒரு வசதி.
அப்படியானால் ராகுல் பண்டிதா தற்சமயம் வசிக்கும் அமெரிக்கா இந்தியாவைவிட மேலான நாடா? இல்லை என்பதுதான் பதில்!
அங்கும் தினம் தினம் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள்மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அங்கும் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுகின்றனர். அங்கும் முரண்பாடுகள் முகமலர்ச்சியுடன் ஏற்கப்படுவதில்லை. இருந்தும் இந்தியாவைவிட அமெரிக்கா மேலானது என்று ராகுல் பண்டிதா கருதுகிறாரா? ஆம். கீழ்வரும் மூன்று காரணங்களுக்காக.
1. நீ ஆப்பிரிக்காவுக்குப் போ என்று கறுப்பின மக்களை அங்கே யாரும் உத்தரவிடுவதில்லை
2. முரண்படுபவர்களுக்கு ஒரு ஜனநாயக வெளி அங்கே இருக்கிறது. உங்களால் அரசை விமர்சிக்கமுடியும், அரசை எதிர்த்துத் துண்டுப் பிரசுரங்கள் எழுதி விநியோகிக்கமுடியும்
3. தனி நபர்கள் குண்டர்களாக இருந்தாலும் நிறுவனங்கள் அப்படி இருக்காது
ஆனால், இந்த மூன்றும் இந்தியாவில் இல்லை!
இங்கே மதத்தையும் சாதியையும் முன்வைத்து வன்மத்துடன் பிரசாரம் செய்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் அரசு நிறுவனங்களைச் சார்ந்தவர்களாகவும் ஆட்சியில் இருப்பவர்களாகவும் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள்.
குடிமக்களால் அரசை விமர்சிக்கமுடியவில்லை. பத்திரிகைகளால் சுதந்தரமாக, அச்சமின்றி செயல்படமுடியவில்லை. இதை எப்படி ஜனநாயகம் என்று அழைக்கமுடியும்?
அரசு தன் வலிமையைப் பயன்படுத்தி தன்னோடு முரண்படுபவர்களை எதிர்த்துப் போரிடும்போது அங்கே அனைவருக்குமான கருத்துச் சுதந்தரம், அனைவருக்குமான ஜனநாயகம் எப்படிச் சாத்தியப்படும்?
பிரச்னையைத் தீர்ப்பதற்கு முதல் படி, பிரச்னை இருப்பதை அங்கீகரிப்பது. "ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள், அவர்கள் பெரும்பான்மை வெள்ளையர்களால் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார்கள்" என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு ஒப்புக்கொள்வாரா?
விருதுகளைத் திருப்பித் தந்த படைப்பாளிகள்மீதும், விஞ்ஞானிகள்மீதும் வசைகள் பொழியப்படுகின்றன. ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களாகவும், தேசத்துரோகிகளாகவும் பார்க்கப்படுகிறார்கள். விமர்சிக்கவேண்டிய பத்திரிகைகள் மீது அடக்குமுறை பாய்கிறது. முரண்படும் படைப்புகள் முடக்கப்படுகின்றன. மாற்றுச் சிந்தனைகள் தணிக்கை செய்யப்படுகின்றன.
ஒற்றை கருத்து, ஒற்றை கலாசாரம், ஒற்றை சிந்தனை முறை... அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்புவது இதைத்தான்.
நூறு பூக்கள் மலர்ந்தால்தான் அது ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் மலர வேண்டுமானால் ஆயிரம் அமீர்கான்கள் அச்சமின்றி உரையாடவேண்டும். ஆயிரம் பத்திரிகைகள் கட்டுரைகள் தீட்டவேண்டும். ஆயிரம் கோவன்கள் பாடவேண்டும்
நன்றி :
--
Mohamed Ferozkhan
k-tic
No comments:
Post a Comment