சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆங்காங்கே திடீரென உருவாகியுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு பின்னர் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இன்று பிற்பகல் தொடங்கிய கனமழை விட்டு விட்டு கொட்டித் தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக அண்ணாசாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை, உள்ளிட்ட சாலைகளில் திடீரென உருவாகியுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்தன. இதனால், பணி முடித்து வீடு திரும்பியவர்களும், பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். தற்போது கடந்த சில மணி நேரமாக சேப்பாக்கம், ராயபுரம், சூளைமேடு, நுங்கம்பாக்கம், மைலாப்பூர், அம்பத்தூர், ஆர்.கே.நகர், ராயபேட்டை, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், அயப்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் இலங்கைக்குத் தெற்கே மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தமிழகம், புதுச்சேரியில் மேலும் 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment