Latest News

மாணவர்கள் கையில் மது வந்தது எப்படி... காரணமானவர்களை தண்டியுங்கள் - ராமதாஸ் கேள்வி


திருச்செங்கோட்டில் மாணவியருக்கு சட்ட விரோதமாக மது கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில் அவர், "நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 11 ஆம் வகுப்பு மாணவிகள் 7 பேர் வகுப்பறையில் மது குடித்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து மாணவ சமுதாயத்தின் சீரழிவுக்கு வழிவகுத்த அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மது வாங்கி குடித்த மாணவிகள்: திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21ம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், பள்ளிக்கூடத்திற்கு காலை 8 மணிக்கே வந்த இந்த மாணவிகள் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து குடித்துள்ளனர். இவர்களில் 2 மாணவிகள் தான் மது வாங்கி வந்து மற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர். மது குடித்த மாணவிகளில் சிலர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இடைநீக்கம் செய்த பள்ளி: இதை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியை 7 மாணவிகளையும் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளார். அவர்களில் 4 மாணவிகளின் பெற்றோரை அழைத்து மாற்றுச்சான்றிதழ்களையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இத்தகைய மது அருந்தும் நிகழ்வுகள் நடப்பது இது முதல் முறையல்ல. திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் அண்மையில் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். மாணவ சமுதாயத்தின் சீரழிவுக்கு இவை வெட்கப்பட வேண்டிய உதாரணங்களாகும். மதுக்கடைகள் கூடாது: ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் அளவுக்கு துணிந்திருக்கின்றனர் என்றால் அதற்கான புறச்சூழல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று தான் பொருள். தமிழகத்தில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு மதுக்கடை திறக்கக்கூடாது என்று விதிகளில் கூறப்பட்டிருந்தாலும், அதை செயல்படுத்த வேண்டிய அரசே, அந்த விதியை மீறி பள்ளிகளுக்கு அருகில் மதுக்கடைகளை திறக்கிறது. கைக்கெட்டும் தொலைவில் மது தாராளமாக கிடைப்பது தான் மாணவ, மாணவியர் மதுப் பழக்கத்திற்கு ஆளாவதற்கு முதன்மைக் காரணமாகும். 10 மணிக்குதான் திறக்க வேண்டும்: தமிழகத்தில் மதுக்கடைகள் காலை 10 மணிக்குத்தான் திறக்கப்பட வேண்டும். ஆனால், காலை 8 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு வரும் போதே மது பாட்டில்களை வாங்கி வந்துள்ளனர். அவர்கள் முதல் நாளே மதுவை வாங்கி வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் நிகழ்வன்று காலையில்தான் வாங்கியிருக்க வேண்டும். அப்படியானால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே அரசு மதுக்கடைகளிலோ, வேறு இடங்களிலோ மது விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கடுமையான விதி மீறல்: அதேபோல், 21 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு மட்டும்தான் மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். இவ்விதி முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி பா.ம.க. தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது, "மதுக்கடைகளில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்க மாட்டோம்; தேவைப்பட்டால் மது வாங்க வருபவர்களிடம் வயது சான்றை கோருவோம்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்து மூலம் உத்தரவாதம் அளித்தது. இத்தகைய சூழலில் 15 வயது மாணவிகளுக்கு மது விற்பனை செய்யப்பட்டது கடுமையான விதி மீறல் ஆகும். கட்டுப்பாடு அவசியம்: வகுப்பறையில் மாணவிகள் மது அருந்தியது பெரும் தவறு என்பதில் ஐயமில்லை. பள்ளியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும், இனியும் பள்ளியில் மது அருந்தும் துணிச்சல் வேறு யாருக்கும் வந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சம்பந்தப்பட்ட மாணவிகளை பள்ளியிலிருந்து நீக்க தலைமை ஆசிரியர் முடிவு செய்ததையும் தவறாக பார்க்க முடியாது. ஆபத்தான ஒன்று: ஆனால், அவ்வாறு செய்வதன் மூலம் இரு வகையான மோசமான விளைவுகள் ஏற்படும். முதலாவதாக வகுப்பறையில் மது அருந்தியது மாணவிகளின் குற்றம் என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம், சட்டவிரோதமாக அவர்களுக்கு மது கிடைக்க காரணமாக இருந்த மதுக்கடை விற்பனையாளர் முதல் மாவட்ட ஆட்சியர், முதல்வர் வரை அனைவரின் கடமை மீறலும் மூடி மறைக்கப்படுகிறது. இது ஆபத்தானதாகும். சீரழிக்கும் செயல்: இரண்டாவதாக வகுப்பறையில் மது அருந்திய மாணவிகளை குற்றவாளிகளாக பார்க்கக்கூடாது. மாறாக மதுவால் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்க வேண்டும். அவர்களை பள்ளியிலிருந்து நீக்கினால் அவர்கள் இதையே காரணமாக வைத்து இன்னும் அதிகமாக மதுவுக்கு அடிமையாகும் ஆபத்துள்ளது. பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு வேறு பணிகள் இருக்காது என்பதால் அவர்கள் மது உள்ளிட்ட தவறான வழிகளில் செல்ல அதிக நேரம் கிடைக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, ஒரு மாணவரை பள்ளியிலிருந்து நீக்குவது தண்டனை அல்ல... எதிர்காலத்தை சீரழிக்கும் செயல். மது அருந்துவதால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை விட கல்வி மறுக்கப்படுவதால் அதிக பாதிப்பு ஏற்படும். மது விலக்கு நடைமுறை: எனவே, வகுப்பறையில் மது அருந்தியதாக இப்போதும், இதற்கு முன்பும் பள்ளியிருந்து நீக்கப்பட்ட மாணவ, மாணவியரை கண்டித்து அறிவுரைகளும், மனநல ஆலோசனைகளும் வழங்கி தொடர்ந்து கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேநேரத்தில் மாணவ, மாணவியருக்கு சட்ட விரோதமாக மது கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? அதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களின் ஒழுக்கம்: இதற்கெல்லாம் மேலாக மாணவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சீரழித்து வரும் மதுவை ஒழிக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை இதை செய்ய அரசு மறுத்தால் பா.ம.க. ஆட்சியில் முதல் நடவடிக்கையாக மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.