காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கூறியுள்ளார். கோஷ்பு பூசலுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஒருத்தரை ஒருத்தர் போட்டுக்கொடுத்தே படுகுழியில் தள்ளிவிடுவார்கள். ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் பிரிந்து சென்ற பின்னர், கொஞ்ச காலம் அமைதியாக இருந்த தமிழக காங்கிரஸ் கட்சியில், தற்போது மீண்டும் கோஷ்டி பூசல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லிக்கு சென்று சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளங்கோவன், தங்கபாலு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும், இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு டெல்லி சென்று, சோனியா மற்றும் ராகுலை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடிகைகளை நம்பி காங்கிரஸ் இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், தங்கபாலு என தனி நபர்கள் யாரையும் நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்றும் அவர் தெரிவித்தார். குஷ்புவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ''காங்கிரஸ் கட்சிக்கு வந்து ஒரு வருடத்தை பூர்த்தி செய்கிற குஷ்பு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றி விமர்சிக்கத் தகுதியற்றவர்.
நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்கள் யார், யாரை நம்பி இருக்கிறார்கள் என்பதை இந்த நாடறியும். நீங்கள் முன்பு இருந்த கட்சியில் இதுபோல் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களை விமர்சித்ததால், கட்சியைவிட்டு வெளியே வந்த வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் அறிந்தே உள்ளார்கள். கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது. யாரை நம்பியும் காங்கிரஸ் இல்லை என்று குஷ்பு குறிப்பிடுகிறார். காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் இருவரின் போர்ப்படைத் தளபதிகளாம் அன்புத் தலைவர்களையும், அருமைத் தொண்டர்களையும், மக்களையும் நம்பி உள்ளது என்பதை ஆணித்தரமாக நான் பதிவு செய்ய விரும்புகிறேன்" என்று தனது அறிக்கையில் ஹசீனா சையத் கூறி உள்ளார். குஷ்புவின் வருகையும், கட்சியில் அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் சில மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பிடிக்காமல் இருக்கிறது. மகளிர் அணியிலேயே பல கோஷ்டிகள் காணப்படுகின்றன. இந்த அறிக்கைப் போரின் மூலம் யார் யார் யாருடைய கோஷ்டி என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.



No comments:
Post a Comment