வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
10-ம் வகுப்பு, மேல்நிலை படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்போர் உதவித்தொகை பெற சென்னை சாந்தோமில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகை விண்ணப்பங்களை, நந்தனம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலை வாய்ப்பு அலுவகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாதவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ளவர்கள், கிண்டியில் உள்ள மகளிர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித்தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள், விண்ணப்பித்து ஓராண்டு முடிந்தவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை பதிவு எண், உதவித்தொகை எண் ஆகியவற்றுடன் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment