தமிழக முதல்வரை விமர்சித்துப் பாடியதற்காக பாடகர் கோவன் கைது செய்யப்பட்டது எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும், ஆனபோதும் இதற்காக முடங்கிவிட மாட்டோம் என கோவனின் மகனும் வழக்கறிஞருமான சாருவாகன் தெரிவித்துள்ளார். மக்கள் கலை இலக்கியக் கழக கலைக் குழுவைச் சேர்ந்த பாடகர் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரை நவம்பர் 6-ஆம் தேதி வரை காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி குழுமணி அருகேயுள்ள அரவானூரைச் சேர்ந்தவர் கோவன் (51). இவர் மக்கள் கலை இலக்கியக் கழக (மகஇக) கலைக் குழு மையப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். மது விலக்கை வலியுறுத்தி நடத்திவரும் கலை நிகழ்ச்சிகளில் கோவன் பாடிய "மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடல் மிகவும் பிரபலமாகி வருகிறது. மேலும், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களிலும் இந்தப் பாடல் பிரபலமாகி வருகிறது. இந்தப் பாடல் தமிழக முதல்வரை விமர்சிப்பதாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, வியாழக்கிழமை இரவு சென்னையிலிருந்து திருச்சி வந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பாடகர் கோவனை அவரது வீட்டுக்குச் சென்று கைது செய்து சென்னைக்கு கொண்டு சென்றனர். ரசசிய இடத்தில் கோவனை போலீஸார் விசாரித்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 6-ஆம் தேதி வரை காவலில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது தேசத்துரோக வழக்கு மற்றும் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துவது, குற்றம் செய்ய தூண்டுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவனின் கைதிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கைதின் போது நடந்தது என்ன என நக்கீரனுக்கு அவரது மகன் சாருவாகன் பேட்டியளித்துள்ளார். வழக்கறிஞரான சாருவாகன் அதில் கூறியிருப்பதாவது:-
கதவைத் திறந்ததும் கைது...
அன்று அதிகாலை 2.30 மணியளவில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கதவைத் திறந்து பார்த்தோம். அப்பா ஹோமியோபதி மருந்து தருவார் என்பதால் நோயாளிகள் பலர் இரவு நேரங்களில் கூட அப்பாவைப் பார்க்க வருவதுண்டு. அவ்வாறு யாரோ வந்திருக்கிறார்கள் என முதலில் நினைத்தோம். ஆனால், வந்தவர்கள் கதவைத் திறந்ததும் அப்பாவைப் பிடித்து இழுத்தார்கள். என்னவென்று கேட்டதற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். ஆடையை சரி செய்யக்கூட அவர்கள் அவகாசம் தரவில்லை. செருப்பும் அணியவிடவில்லை.
கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றனர்...
வக்கீலான நான் கைதிற்கான காரணம் குறித்துக் கேட்டேன். அதற்கு ஸ்டேஷனிற்கு வந்து தெரிந்து கொள்ளுங்கள் என அவர்கள் தெரிவித்தனர். மேற்கொண்டு என்னைப் பேச விடாமல், அப்பா கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்பாவை எங்களைத் திரும்பிப் பார்க்கக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.
பூட்டப்பட்டிருந்த போலீஸ் ஸ்டேஷன்...
நாங்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தோம். அங்கு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் மற்ற தோழர்களுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்தோம். அப்பாவை எங்கே வைத்திருக்கிறார்கள் என தகவல் தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். மேற்படி தகவல்களுக்கு சென்னை போலீசை தொடர்பு கொள்ளும்படி அவர்கள் கூறிவிட்டனர்.
சைபர் கிரைம்...
பின்னர் காலை 9 மணியளவில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மெல்வின் எங்களைத் தொடர்பு கொண்டு, டாஸ்மாக்கிற்கு எதிரான பாடல் யுடியூப்பில் வெளியிட்டதற்காக அப்பாவைக் கைது செய்ததாகத் தெரிவித்தார். கைதிற்கு அஞ்சுபர்கள் அல்ல நாங்கள். ஏன் எங்களிடம் காரணம் கூறாமல் அழைத்துச் சென்றீர்கள் எனக் கேட்டோம். அதற்கு காலை 10 மணிக்கு கமிஷ்னர் அலுவலகம் வரச் சொன்னார்கள். பின்னர் அப்பாவிடம் பேசினோம். அவர் தன்னை போலீசார் சென்னை அழைத்துச் செல்வதாகவும், பயப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் கூறினார்.
கடத்தல் நாடகம்... அப்பாவின் கைதில் சட்டமுறைகள் பின்பற்றப்படவில்லை. கடத்தல் நாடகம் போல நடந்தது. என்ன நடந்தது என யூகிக்கவே முடியவில்லை. நாடு முழுவதும் கருத்துரிமைக்கு எதிராக எழுத்தாளர்கள், முற்போக்கானவர்கள், கம்யூனிஸ்டுகள் நசுக்கப்பட்டு வருகின்றனர். கல்புர்கி கதவைத் திறந்ததும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்து வெறிப் பாசிசம் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. இது கண்டிக்கத் தக்கது. எதிர்பார்த்தது தான்... கைது எதிர்பார்க்கப்பட்டது தான். அப்பாவும் அதனை எதிர்பார்த்து தான் இருந்தார். அரசின் அட்டூழியங்களை, கொடுமைகளை எதிர்த்து பேசுபவர்கள் மீது கைதும், தடியடியும் நிகழ்த்தப்படுகிறது. ஆதலால் கைது நடவடிக்கையால் நாங்கள் முடங்க மாட்டோம். இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். பீதியை ஏற்படுத்த முயற்சி... மக்களின் குடியைக் கெடுக்கும், சிந்திக்க விடாமல் தடுக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் எனக் கூறியதற்காக, அரசிற்கு எதிராக சதி செய்ததாகக் கூறி கைது செய்துள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சி. எதிர்த்துப் பேசினால் சிறை, துப்பாக்கிச் சூடு என மக்களை பயமுறுத்தும் விதமாக இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவர்களைப் பொறுத்தவரை அறவழிப் போராட்டம் என்றால் போராடாமல் இருப்பது தான். வாயில் கறுப்புத் துணி கட்டிப் போராடினால் கூட நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடப்படுகிறது. முதல் நோக்கம்... கருத்துரிமை நசுக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவே அப்பா கைது செய்யப்பட்டுள்ளார். இதனை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்துவதே எங்களது முதல் நோக்கம். மற்றபடி அப்பாவை வெளியில் கொண்டு வரும் வேலைகளை மற்ற தோழர்கள், வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வர்' என அப்பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment