புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்மாளை, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் ஏ.எஸ்.பொன்னம்மாள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், 7 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைத்தவர் பொன்னம்மாள்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர், மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து ப.சிதம்பரம் தொடங்கிய கட்சியில் இணைந்தார். முதுமை காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினார். தற்போது பொன்னம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தலைவர் கலைஞர் தன்னை நலம் விசாரிக்க சொன்னதாகவும், உடல் நலத்தை நன்கு பார்த்துகொள்ளும்படியும், மீண்டும் நல்ல உடல்நிலைக்கு வரும்படி வாழ்த்து சொல்லச் சொன்னதாகவும் பொன்னம்மாளிடம் ஸ்டாலின் கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதாரணி, பொன்னம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொன்னம்மாள் அம்மையாரை பார்த்து அரசியல் கற்று தேர்ந்தவர்கள் நாங்கள். காங்கிரசுக்கு இவர் ஒரு வெற்றி அடையாளம். இவரை காங்கிரஸ் கட்சி கைவிடாது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மூலமாக கட்சியில் இருந்து பொன்னம்மாளுக்கு நிதி உதவி அளிக்க ஏற்பாடு செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.
நலம் விசாரித்த ராகுல்காந்தி
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்மாளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திரு.ராகுல்காந்தி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். மேலும், சிகிச்சை பெற்று வரும் அவரிடம் ஏதாவது உதவி தேவையா என்று ராகுல் காந்தி கேட்டதற்கு , இங்குள்ள அனைவரும் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். விரைவில் குணமடைந்து தங்களை ஒரு மாதத்திற்குள் டெல்லி வந்து சந்திப்பேன் என்று அவரிடம் பொன்னம்மாள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment