இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் 132 பேரும் ஆப்கானிஸ்தானில் 24 பேரும் பலியாகி உள்ளனர். இரு நாடுகளிலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில் 102 கி.மீ ஆழத்தில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி இருந்தது.
இதனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். காபூல் உள்ளிட்ட ஆப்கான் நகரங்களில் மின்சாரமும் தொலைபேசி சேவையும் முற்றாக துண்டிக்கப்பட்டன. இதேபோல் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி பெசாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போதைய தகவல்களின்படி பாகிஸ்தானின் பல நகரங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கட்டிடங்கள் இடிந்தும் மேற்கூரைகள் சரிந்தும் நிலச்சரிவு ஏற்பட்டும் நெரிசலில் சிக்கியும் 132 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 12 பள்ளி மாணவிகள் உட்பட 24 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலநடுக்கத்தால் இந்தியாவின் ஸ்ரீநகர், சண்டிகர், சிம்லா, டெல்லி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
No comments:
Post a Comment