ஜகார்த்தா: நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக விளங்கி அதன்பிறகு பகைவனாக மாறிய, சோட்டா ராஜன் இந்தோனேஷியாவின் பாலி நகரில் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மும்பை குண்டுவெடிப்பில், தொடர்புடைய குற்றவாளியான சோட்டா ராஜனை இந்தியா அழைத்துவந்து விசாரணை நடத்த இந்திய உளவு அமைப்பான 'ரா' திட்டமிட்டுள்ளது. சோட்டா ராஜன் கடந்த மாதம், ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்ததை அந்த நாட்டு போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் அவர் பல நகரங்களிலும் தனது குடியிருப்பை மாற்றிக்கொண்டே இருந்ததால் கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில், இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவுக்கு சோட்டா ராஜன் தப்பிச் செல்வதை ஆஸ்திரேலிய போலீசார் கண்டறிந்து, இந்தோனேஷிய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இரு நாட்டு காவல்துறை கூட்டுறவுடன், இன்டர்போல் போலீசார், நேற்று சோட்டா ராஜனை கைது செய்தனர். மும்பை குண்டுவெடிப்பில் சோட்டா ராஜனுக்கு தொடர்புள்ளது. சுமார் 20 வருடங்களாக சோட்டா ராஜனை இந்தியா தேடிவருகிறது. இதுகுறித்து இந்திய உளவு அமைப்பான 'ரா' அதிகாரி ஒருவர் கூறுகையில், சோட்டா ராஜனை இந்தியா அழைத்துவந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். பாலிக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்து அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றார். ஒரு காலத்தில் மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த தாவூதின் கும்பலில் சோட்டா ராஜன் 2வது நபராக இடம் பெற்றிருந்தார். சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தாவூதுக்கு எதிராக தனி அணியாக செயல்பட ஆரம்பித்தார் சோட்டா ராஜன். இதனால் இருவருக்குமிடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சோட்டா ராஜனின் கதையை முடிக்க தாவூத் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment