கடந்த வருடம் காவிரியில் அதிக தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம், இவ்வாண்டு அதற்கு வாய்ப்பு இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக முதல்வரை வலியுறுத்துமாறு கோரிக்கைவிடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் நிலவும் வறட்சியை காரணம் காட்டி, நீர் திறக்க முடியாது என்று கர்நாடக தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெங்களூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இதையே கூறியுள்ளார். அவர் கூறியதாவது: கர்நாடகாவில் இந்த ஆண்டு, கடும் வறட்சி நிலவுகிறது. எனவே கர்நாடக அணைக்கட்டுகள் வறண்டு விட்டன. கர்நாடகாவிற்கே தண்ணீர் இல்லை. இந்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர வாய்ப்பு இல்லை. கடந்த ஆண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்தது, காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்த அளவைவிட மிக அதிகமாக தண்ணீர் வழங்கினோம். இம்முறை நீர் இல்லை. வரும் நாட்களில் மழை பெய்து தண்ணீர் அதிகரித்தால், அதன்பிறகு நீர் வழங்குவதில் பிரச்சினை இல்லை. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
No comments:
Post a Comment