மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி கிரானைட் முறைகேடு பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி முதல், மதுரையில் முகாமிட்டு, கிரானைட் முறைகேடுகள் குறித்து, சகாயம் விசாரித்து வருகிறார். இதுவரை 20 கட்டங்களாக சகாயம் விசாரணை நடத்தியுள்ளார். இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, பல முறை, சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
நரபலி தொடர்பான புகாரை அடுத்து சகாயம் தலைமையில் கடந்த 13ம் தேதி மேலூர் அருகே உள்ள மலம்பட்டி சுடுகாட்டில் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரு குழந்தை உள்பட 4 பேரின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியது. போலி ஆவணங்கள் மூலம், துாத்துக்குடி துறைமுகம் வழியாக, கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதும், சுங்கவரி ஏய்ப்பு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், சகாயம், விசாரணை குழுவினருடன், நேற்று துாத்துக்குடி சென்று, துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் சுங்க அதிகாரிகளிடம் விசாரித்தார். கிரானைட் முறைகேடுகள் குறித்த விசாரணை முடிந்துவிட்டதாக சகாயம் நேற்று அறிவித்த நிலையில் இன்று அறிக்கை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்ட்டது. இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம் அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட ஆணையர் சகாயம் இன்று மனுத் தாக்கல் செய்தார். விசாரணை முடிந்து விட்டதால் ஆவணங்களை சரிபார்க்க அவகாசம் தேவை என்றும், விசாரணை அறிக்கை ஆவணங்கள் 12 ஆயிரம் பக்கங்களாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று நண்பகலில் விசாரணைக்கு வந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி, மேலும் 4 வாரகாலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். சகாயத்துக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை, அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, நரபலி தொடர்பான புகாரை காவல்துறையினர் தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் புகார் அளித்த சேவற்கொடியோனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment