ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 750 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் 2 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மினா நகர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை என ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்திருந்தார்.
இந்தியர்கள் யாரேனும் பலியானார்களா என்ற உறுதியான விபரங்கள் தெரியாமல் இருந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.பி. ஜான் என்ற 60 வயது முதியவர் ஒருவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கேரள மாநிலத்தின் கொடுங்கலூரை சேர்ந்த முகமது என்பவரும் பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பற்றி ஊரக மேம்பாட்டு மற்றும் மாநிலம் சாரா கேரள விவகாரத் துறை அமைச்சர் கே.சி. ஜோசப் செய்தியாளர்களிடம் கூறும்போது, கூட்ட நெரிசலில் திரிசூர் மாவட்டத்திற்குட்பட்ட கொடுங்கலூர் பகுதியை சேர்ந்த முகமது என்பர் பலியாகியுள்ளார் என அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
தனியார் நிறுவனம் மூலம் ஹஜ் பயணத்திற்கு அவர் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். நெரிசலில் சிக்கியவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள 0096 6125 458 000 மற்றும் 0096 6125 496 000 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment