டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய அரசு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த வகையில் இவ்வாண்டுக்கான வீரர்களை, முன்னாள் நீதிபதி வி.கே. பாலி தலைமையிலான குழு தேர்ந்தெடுத்தது.
இந்தக் குழு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சாவின் பெயரைப் பரிந்துரைத்தது. இவருக்கு விருது வழங்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துவிட்டது. வரும் 29ம் தேதி தேசிய விளையாட்டு நாளன்று ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அர்ஜுனா விருது போன்ற மற்ற பல உயரிய விளையாட்டு விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில், பாராலிம்பிக் விளையாட்டு வீரர் எச்.என்.கிரீஷா என்பவர் கர்நாடக ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், சானியாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க கூடாது என்று கேட்டுக்கொண்டார். 2011-14க்கு இடைப்பட்ட காலத்தில், சானியா எந்த ஒரு மெடலும் வெல்லவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், விருது குழுவின் வழிமுறைப்படி பார்த்தால் தனக்கு 90 மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும். விருதும் தனக்குதான் கிடைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 2012ல் லண்டன் பாராலிம்பிக் போட்டியில் தான் வெள்ளி பதக்கம் வென்றதையும், 2014 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதையும் மனுவில் குறிப்பிட்டுள்ள கிரிஷா, இவ்விரு பதக்கங்கள் மூலம் தனக்கு 90 மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் சானியாவை ஏன் விருதுக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கை இன்று விசாரணைக்கு ஏற்ற ஹைகோர்ட், சானியாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க இடைக்கால தடை விதித்தது. மேலும், மத்திய அரசுக்கும், சானியா மிர்சாவுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஹைகோர்ட்.
No comments:
Post a Comment