Latest News

அதிரையில் ஒர் கூகுள் ஸ்ட்ரீட் மனிதர் - நெய்னா முகமது தம்பி



அவ்வப்போது நாம் சாமானிய மனிதர்களின் சாதனைகளையும், சேவைகளையும் நினைவுகூர்ந்து வருகிறோம். அதன் வரிசையில் நம் சமகால சாமானிய சாதனையாளராக வாழ்ந்துவரும் கீழத்தெருவைச் சேர்ந்த மூத்த சகோதரர் நெய்னா முகமது தம்பி அவர்களை பற்றிய மிகச்சில விபரங்களை பகிர்ந்து கொள்வது நம்மில் மூத்தோருக்கு பசுமையான நினைவுகளாகவும், இளையோருக்கு உத்வேகம் தரும் ஒருவரை பற்றி அறிந்து கொண்ட புத்துணர்வும் கிடைக்கலாம்.

உலக முஸ்லீம்களால் பெரிதும் போற்றப்படும் ஹதீஸ்கலை அறிஞர், ஸஹீஹ் அல் புஹாரி மற்றும் பல கிரந்தங்களின் ஆசிரியர் இமார் புகாரி அவர்கள் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்களை அதன் அறிவிப்பாளர் தொடர் மற்றும் அறிவிப்பாளர்களில் சுமார் 1800 பேருடைய வரலாற்றுடன் பிழையற மனனம் செய்து வைத்திருந்ததை அறிந்து வியக்கின்றோம்.

சுமார் 13 நூற்றாண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் என்ற நாமம் கூட இவ்வுலகில் இல்லாத நேரத்தில் இமாம் புகாரி போன்ற சூப்பர் மனித கம்ப்யூட்டர்களை அல்லாஹ் உலகிற்கு அளித்தான். இன்று குறைமதியாளர்கள் அறிஞர்களாக அறியப்படும் காலத்தில் கம்ப்யூட்டர்கள் மனிதர்களுக்கு பதிலாக கோலோச்சிக் கொண்டுள்ளன என்ற சிறு ஒப்பிடுதலுடன் 'கூகுள் தம்பி' மன்னிக்கவும் 'நெய்னா முகமது தம்பி' அவர்களின் நினைவாற்றல் பற்றி சிறிது அசைபோடுவோம்.


சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக... நம் அதிரையின் மேலத்தெரு, கீழத்தெரு மற்றும் நெசவுத்தெருவில் நடைபெறும் அனைத்து திருமணம், கத்னா போன்ற சுன்னத்தான காரியங்களுக்கும் அழைப்பிலும், அழைக்கப்படுவதற்கும் தவிர்க்க முடியாத ஒருவர் தான் நமது நெய்னா முகமது தம்பி (வயது 80) அவர்கள். ஏனெனில் நமது ஒவ்வொருவர் குடும்பத்தின் பிரதிநிதியாக நமக்கு வேண்டியவர்களை வீடு வீடாக சென்று அழைப்பவரே அவர் தான். ப்பூ.. இதிலென்ன ஆச்சரியம் என அலட்சியம் வேண்டாம். அவருடைய சேவை தொடர்வாரின்றி நிற்கும்போது தான் அவருடைய அருமையை, தேவையை முழுமையாக உணர முடியும்.

நெய்னா முகமது தம்பியின் நினைவும், சிறப்பும்:
1. மேலத்தெரு, கீழத்தெரு, நெசவுதெருவை சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள்.

2. அவர்களின் குடும்ப பெயர்கள் அந்தக்கால தமிழ் இனிஷியலுடன்.

3. அவர்களின் தற்போதைய குடும்பத்தலைவரின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கில இனிஷியலுடன்.

4. அவர்களின் சந்ததிகளின் பெயர்கள் ஆங்கில இனிஷியலுடன்.

5. இறந்தோர்களை நினைவு பதிவிலிருந்து அகற்றுதல்.

6. புதிய இளைஞர்களை நினைவில் சேர்த்தல்.

7. வெளிநாட்டு சபுராளிகளின் பெயர்களை அவர்களின் வருகை மற்றும் புறப்பாடுக்கேற்றவாறு அப்டேட் செய்து கொள்ளுதல்.

8. புதிய வீடுகளை, புதிய குடியிருப்புகளை நினைவேற்றல்.

9. மேற்படி 3 தெருக்களின் ரோடுகள், சந்துகள், கொல்லைபுற வீடுகள் பற்றி அறிந்திருத்தல்.
10. ஒரே வீட்டுக்குள் வாழும் 2 அல்லது மேற்பட்ட குடித்தனங்களை பற்றிய அறிவு.

11. திருமண பத்திரிக்கை வைக்க தகுதி கொண்ட ஒரே வீடடிற்குள் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நினைவில் வைத்திருத்தல்.
.
12. மேற்படி 3 தெருக்களின் விரிவாக்க பகுதிகளை அறிந்திருத்தல்.

13. மேற்படி 3 தெருவை சேர்ந்தவர்கள் அதிரையின் வேறு தெருக்களில் குடியேறி இருந்தால் அதையும் நினைவில் சேர்த்தல்.

14. பத்திரிக்கை கொடுக்கும் எண்ணிக்கையை வைத்தே எத்தனை பேர் வலீமாவிற்கு வருவார்கள், எவ்வளவு சஹனிற்கு சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டும் என துள்ளியமான ஆலோசணை.

15. எத்தனை காலம் கழித்தும் சந்திக்கும் எந்த நபரையும் புன்முறுவலுடன் பெயரை சரியாக கூறி அழைத்தல்.

16. & சன்ஸ், & பிரதர்ஸ் என எழுதி திருமண அழைப்பிதழின் விரயத்தை ஒரளவு கட்டுக் கொண்டுவந்தவர்.

17. இந்த தள்ளாத வயதிலும் நடந்தே அனைத்து பகுதிகளுக்கும் செல்வதுடன் இன்னும் அழகிய நினைவாற்றலுடன் 'ஓர் சதாவதானிக்கு ஒப்பாக' இருப்பது அல்லாஹ் அவருக்குச் செய்துள்ள மகா அருளே அன்றி வேறில்லை.

என இன்னும் பல சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

யாரால்? எப்படி சாத்தியமாயிற்று!!!!

ஒரு முறை இளைஞனாக இருக்கும் பொழுது, கம்புக்கட்டு கணக்கப்பிள்ளை அப்பா என அன்புடன் அழைக்கப்பட்ட அ.மு.மு.முகமது சேக்காதி அப்பா அவர்களுடன் திருமண பத்திரிக்கை விநியோகம் செய்ய சென்ற போது தெரு பற்றிய விபரங்கள், குடும்பம் பற்றிய விபரங்கள், இனிஷியல் பற்றிய விபரங்கள் என திருமண பத்திரிக்கை விநியோகத்திற்கு தேவையான அனைத்து விபரங்களையும் அல்லாஹ்வின் நாட்டத்தல் இயற்கையாக உள்வாங்கிக் கொண்டுள்ளார். கணக்கப்பிள்ளை அப்பா அடுத்த மாதமே இன்னொரு தேவைக்கான பத்திரிக்கை விநியோகத்திற்கு உதவ வேண்டி அழைத்தபோது தனது நினைவிலிருந்து பெயர்களை சொல்லி, வீட்டையும் விலாசத்தையும் வரிசை கிரமமாக சொன்னவுடன் கணக்கப்பிள்ளை அப்பா திருமண பத்திரிக்கை எழுதி விநியோகிக்கும் பொறுப்பை மகிழ்வுடன் ஒப்படைத்தாராம், அன்று தொடங்கிய நடை இன்றும் தொடர்கிறது,  வாகனங்களை தொட்டதில்லை.

மேற்படி 3 தெருக்களும் இன்று கிளைவிட்டு, சவுக்கு கொல்லை, சானா வயல், கிராணி நகர், மொந்தங்கொல்லை, கொக்குகொல்லை, காட்டுப்பள்ளி தர்கா, பிலால் நகர், கொசவங்கொல்லை என விரிவாக்கம் அடைந்துள்ளதையும், 400 தலைகட்டுகள் இன்று 800 தலைக்கட்டுகளாக மாறியுள்ளதையும் அவருக்கேயுரிய புன்முறுவலுடன் சிலாகித்து சொல்கிறார் கேட்ட நமக்குத்தான் தலைசுற்றல் ஏற்பட்டது. ஒரு சில விரிவாக்க பகுதிகளை பற்றி அவர் சொல்லித்தான் நாங்கள் அறிந்தோம் ஆனால் அவரோ அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லின் பெயரையும் அறிந்து வைத்துள்ளாரே என்ற வியப்பால் ஏற்பட்ட தலைசுற்றல் அது.

திருமண பத்திரிக்கை விநியோகத்தின் போது புதிதாக ஏதாவது புதிதாக வீடுகள் கட்டப்பட்டால் அப்போதே அந்த வீடுகள் குறித்த விபரங்களை சேகரித்து விடுவேன் என தான் கற்றுக்கொள்ளும் நினைவாற்றலின் ரகசியத்தை வெள்ளந்தியாக சொன்னார்.

தனக்குப்பின் தன்னுடைய சேவையை தொடர வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வருடமாக தனது பேரன் பாபு என்கிற தையூப் அவர்களுக்கு செயல்முறை பயிற்சியும் அளித்து வருகிறார் என்றாலும் இதுவரை எதிர்பார்த்த பலனில்லை ஆனாலும் நம்பிக்கையுடன் பயிற்சியளிப்பை தொடர்கின்றார். அதேவேளைதனது நினைவிலுள்ள ஆவணத்தை சம்பந்தப்பட்ட தெருக்களை சேர்ந்த சங்கங்கள் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் மனதார விரும்புகிறார்.

பலரிடமும் பெற்றுள்ள நல்ல பெயரையும், பாராட்டையும் நினைவுகூறும் நெய்னா முகமது தம்பி அவர்கள் ஒருமுறை கடற்கரை தெருவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு திருமண பத்திரிக்கை விநியோக விடயத்தில் உதவியதையும் அதனால் திருப்தியுற்ற அந்த பிரமுகர் தன்னை கண்ணியப்படுத்திய நிகழ்வையும் பூரிப்புடன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டார்.

மேலும் ஆங்கில மருத்துவர்கள் கத்னா செய்யும் இன்றைய காலத்திலும், பாரம்பரிய முறைப்படி கத்னா செய்து கொள்ள தன்னை நம்பி வருவோரும் இருக்கிறார்கள் என பெருமிதம் கொள்கிறார்.

புகழ்பெற்ற பாரம்பரிய பிள்ளைபேறு மருத்துவரான மரியம் கனி அவர்களின் மருமகனும், பள்ளிப்படிப்பை தாண்டாதவருமான இந்த அனுபவ மேதை, தனது சேவை பயணத்தில் ஒரே ஒரு சலனத்தை தவிர மற்ற அனைத்தும் சுகமே என்பதுடன் 1980ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஏகத்துவ மறுமலர்ச்சியின் தாக்கம் கூட தன்னை பாதிக்காத அளவிற்கு முஹல்லாவாசிகள் அனைவரின் அன்பையும் பெற்றுள்ளதாக திருப்தி அடைந்துள்ளார்.

இறுதியாக, இன்று பள்ளி, கல்லூரி என நீக்கமற நிறைந்திருக்கும் மனப்பாட உலகினருக்கு கூட கிடைக்காத நினைவாற்றலை அல்லாஹ் நெய்னா முகமது தம்பி அவர்களுக்கு விலைமதிப்பற்ற பொக்கிஷமாக வழங்கி இருக்கின்றான் என்ற உண்மையை அவரும் உணர்ந்தேயுள்ளார்.

அவரின் நினைவாற்றலில் பதிந்துள்ள நம் குடும்பங்கள் குறித்த குறிப்புக்களை கணிணிமயப்படுத்த மேலத்தெரு, கீழத்தெரு மற்றும் நெசவுத்தெரு சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் முன்வர வேண்டும் என்ற அவர்தம் விருப்பத்தையே நாங்களும் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வழிமொழிகிறோம்.

இப்போது சொல்லுங்கள், நெய்னா முகமது தம்பி அவர்களை நாம்'கூகுள் ஸ்ட்ரீட் வீயூவின் முன்னோடி மனிதர்' என்று விளிப்பது தானே சாலச் சிறந்தது.

இவரை போன்ற சாமானிய சாதனையாளர் அதிரையின் பிற பகுதிகளிலும் கண்டிப்பாக இருப்பார்கள் என நம்புகிறோம். அறிந்தோர் அறியத் தாருங்கள்.

சந்திப்பு மற்றும் புகைப்படங்கள்
அதிரை அமீன் & S. அப்துல் காதர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.