மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு சரியாக உள்ளது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திடீர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது...
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், மக்கள் நலனை காக்க வலியுறுத்தியும் ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், வரும் 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை, தஞ்சை, மதுரை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம். இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த, அனுமதிக்க மறுப்பது தவறு. அனுமதிக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வேறொரு நாளில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். கூட்டு இயக்க தலைவர்கள் அனைவரும், சென்னையில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று, கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்த அணை விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மத்திய அரசும், அமைச்சர்களும் கொடுக்கும் தைரியத்தில்தான் கர்நாடகா முதல்வர் இவ்வாறு பேசுகிறார். மேகதாது பிரச்சினையில் தமிழக அரசின் நிலைப்பாடு சரியாக உள்ளது. மத்திய அமைச்சர்களும், கர்நாடகா அரசும் இதில் சதித்திட்டம் தீட்டுகின்றனர். இவ்வாறு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
No comments:
Post a Comment