மதுவிலக்கு கோரி வரும்13 ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிற்கு எதிராக அனைத்து கட்சியினரும் களமிறங்கியுள்ள நிலையில் இந்த பிரச்சினையை தேமுதிக தீவிரமாகவே அணுகுகிறது. கடந்த 6ம் தேதி மனிதச்சங்கிலி போரட்டம் நடத்திய போது விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது சம்பவத்தைக் கண்டித்து, காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மீண்டும் மதுவிற்கு எதிராக மற்றொரு போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளது தேமுதிக.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுவால் கணவனை இழந்த மனைவியும், மகனை இழந்த பெற்றோரும், தந்தையை இழந்த குழந்தைகளும் என பல குடும்பங்கள் கஷ்டபடுகின்றன. சமீபத்திய ஆய்வில் தமிழகத்தில் மட்டும் மது அருந்தும் பழக்கத்தால், கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்றவைகள் பாதிக்கப்பட்டு, சுமார் 65 ஆயிரம்பேர் உயிருக்குபோராடும் நிலையிலும், கடந்த பத்தாண்டுகளில் குடிப்பழக்கத்தால் மட்டும் சுமார் இரண்டு லட்சம்பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது. கொடிய விஷத்திற்கு சமமான மதுவை ஒழிக்கவேண்டுமென்ற போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரை இழந்தும், கல்நெஞ்சம் கொண்ட அரசாக, இந்த அதிமுக அரசு இருக்கிறது. தமிழகத்தில் மதுவை அறவே ஒழிக்கவேண்டும், அதற்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கொள்கையாகும். தமிழக மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிமுக அரசு உடனடியாக துவங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி அலுவலக வளாகத்தில், வருகின்ற 13.08.2015 வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை தேமுதிக சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. அது சமயம் தேமுதிகவின் நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக வருகைதந்து உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு, மாபெரும் வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment