கவுன்சிலிங்கிற்காக கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு செல்லவேண்டிய மாணவி ஒருவர் தன் தாயருடன் தவறுதலாக சென்னை அண்ணா பல்கலைக்கு வந்தததால், அவரை அண்ணா பல்கலையில் நடைப்பயிற்சி செய்யும் சிலர் கோயம்புத்தூருக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்ததாக ஒரு செய்தி பேஸ்புக், வாட்ஸப்பில் பரவலாக வலம் வருகின்றது.
இதுகுறித்து கூறப்படுவதாவது:
சனிக்கிழமையன்று காலை 6.30 மணியளவில் ஒரு இளம்பெண்ணும், அவரது தாயாரும் நிறைய பேரிடம் வழி கேட்டுக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் சிலர் அவர்களுக்கு உதவி செய்ய விலாசத்தினை கேட்டுள்ளனர். பிளஸ் 2 வில் 1017 மதிப்பெண்கள் பெற்ற அம்மாணவி சுவாதி, அவரது தாய் தங்கப் பொண்ணுவுடன் திருச்சி முசிறியில் இருந்து கவுன்சிலிங்கிற்காக வந்துள்ளார். ஆனால், கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு பதிலாக அவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கு வந்தது விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. "அவர்கள் அண்ணா அரங்கம், வேளாண் பல்கலைக்கழகம் என்பதற்கு பதிலாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர்" என்று அண்ணா பல்கலையின் முன்னாள் மாணவரும், டிவாக்கர்ஸ் என்ற நடைப்பயிற்கு குழுவின் உறுப்பினருமான சரவணன் தெரிவித்துள்ளார். காலை 8.30 மணியளவில் கோவை பல்கலையில் கலந்தாய்வு தொடங்கிவிடும் என்ற நிலையில் அம்மாவும், பெண்ணும் மனமுடைந்து போயுள்ளனர். இதனையடுத்து நடைப்பயிற்சி குழுவினரில் ஒருவர் அவர்களுக்கு காலை உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். மற்றொருவர் சென்று விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்துள்ளார். மேலும், ஒருவர் வேளாண் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் பேசி நிலைமையை தெரிவித்துள்ளார். நடைப்பயிற்சியாளர்கள் அனைவரும் சேர்ந்து விமான டிக்கெட்டுக்கான 10,500 ரூபாயை அளித்து அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அவர்களில் அண்ணா பல்கலையிலேயே வேலை புரியும் சிலர் கோவை பல்கலைக்கு பேசி இந்த பிரச்சினையை தெரிவித்து மேலும் சிறிது நேரம் கலந்தாய்விற்காக அந்தப் பெண்ணுக்கு பெற்றுத் தந்துள்ளனர். "காலை 11 மணிக்கு கோவை சென்றடைந்த நான் நல்லபடியாக கல்லூரியில் சேர்ந்து விட்டேன்" என்று சுவாதி தெரிவித்துள்ளார். தற்போது அவர் பி.டெக் பயோ டெக்னாலஜி சேர்ந்துள்ளார். "கிட்டதட்ட கடவுள் போல் வந்து எங்களுக்கு உதவி செய்துள்ளனர்" என்றும் சுவாதி தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் மீண்டும் சென்னை வந்து நடைப்பயிற்சி குழுவினர் அளித்த விமான டிக்கெட் தொகையை திருப்பி தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறவும் முடிவு செய்துள்ளனராம்
இதயத்தைத் தொடும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி!
ReplyDelete