Latest News

ஹைப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படுகிறது!!


இந்தியா உருவாக்கி வரும் மிக அதிவேக ஏவுகணையான "ஹைப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை"க்கு மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட உள்ளது. இது குறித்து நமது ஒன் இந்தியா இணையதளத்துக்கு பிரமோஸ் முதன்மை செயல் அதிகாரி சுதிர்குமார் மிஸ்ரா கூறியதாவது: சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையை ஹைப்பர்சோனிக்- மிக அதிவேக ஏவுகணையாக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அது வெற்றிகரமாக முடிவடையும் போது அந்த ஏவுகணைக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படும்.

இந்தியா அதிவேக ஏவுகணைகளை தயாரிக்க வேண்டும் என்பது அப்துல்கலாமின் கனவு. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை உருவாக்கியவர் அப்துல்கலாம். அவரது சிந்தனையில் உதித்ததுதான் பிரமோஸ் ஏவுகணைகள். புதிய ஹைப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைக்கு அப்துல் கலாம் பெயரை சூட்டுவதன் மூலம் இளையதலைமுறை விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் கிடைக்கும். இவ்வாறு சுதிர்குமார் மிஸ்ரா கூறினார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மிக அதிவேக ஏவுகணை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவும் இதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த 7 முதல் 12 ஆண்டுகளில் மிக அதிவேக ஏவுகணையை உருவாக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறக் கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது மணிக்கு 8 ஆயிரத்து 575 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இதை ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்து வருகிறது. அதிவேகத்தில் சென்று பதுங்கு குழிகள் உள்ளிட்ட எதிரிகளின் இலக்கை அழிக்கும் வல்லமை கொண்டது இந்த ஏவுகணை. 1998ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக அப்துல் கலாம் இருந்தபோது, பிரமோஸ் 2 ஏவுகணை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அரசு பிரதிநிதியுடன் அவர் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.