வறுமையின் பிடியில் சிக்கியுள்ள நாட்டுப்புற கலைஞரும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மாவுக்கு, எம்ஜிஆர் அறக்கட்டளை மூலம், ரூ.6 லட்சம் நிதி உதவி அளிக்கவும், மாதந்தோறும், ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கவும், அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரபல நாட்டுப்புற படகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவும், தன் முதுமை காரணமாகவும் தனக்கு ஏற்பட்டுள்ள வறுமைச் சூழலை விவரித்து, தன்னை இத்தகைய சூழலில் இருந்து காப்பாற்றி தனக்கும், தனது குடும்பத்திற்கும் மறு வாழ்வு தருகின்ற வள்ளலாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டும்தான் இருக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து பேட்டி அளித்திருந்தார்.
பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலையையும், இயலாமையையும் உடனடியாக கண்ணுற்ற, அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதி உதவியும், குடும்ப செலவுகளுக்கென்று மாதந்தோறும், 6 ஆயிரம் ரூபாயும் வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும், மதுரை, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் பரவை முனியம்மா அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதியுதவியை 'புரட்சி தலைவர் டாக்டர்.எம்ஜிஆர் அறக்கட்டளை'யே ஏற்கும் என்று அறிவித்துள்ளார். இவ்வாறு அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment