முழு மதுவிலக்கு கோரிக்கைக்காக சசி பெருமாள் தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் என்று வைகோ கூறியுள்ள நிலையில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி வைகோவின் தாயார் மாரியம்மாள் கலிங்கப்பட்டியில் 500 பேருடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். தள்ளாத வயதிலும் வைகோவின் தாயார் போராட்ட களத்தில் குதித்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், நேற்று நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்தார். அது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாகர்கோவிலுக்கு சென்று சசிபெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இன்று சென்னை திரும்பும் அவர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்தக் கோரி நான் நடைபயணம் மேற்கொண்டேன். பொள்ளாச்சி பகுதியில் நடைபயணம் சென்ற போது என்னை சசிபெருமாள் வரவேற்றார். சேலத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த தவறி விட்டனர். இதன்மூலம் போலீஸ் நிர்வாகம் செயல்படவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. முழு மதுவிலக்கு கோரிக்கைக்காக சசி பெருமாள் தனது உயிரையே தியாகம் செய்துள்ளார். எந்த கோரிக்கைக்காக அவர் போராடி வந்தாரோ அதற்கான போராட்டக்களத்திலேயே அவர் மடிந்துள்ளார். இனியாவது பூரண மதுவிலக்கை அமுல்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிபெருமாளின் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
கலிங்கபட்டியில் டாஸ்மாக்
சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மதுபான கடை அமைக்கப்பட்டதால் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிவதாக புகார் எழுந்தது.
மதுபானக்கடையை அகற்றுக
அத்துடன் இந்த சாலை வழியாக செல்பவர்களிடம் குடிமகன்கள் வரம்புமிறி பேசுவதாகவும், இதனால் பிரச்னை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த மதுபான கடையை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வைகோ தாயார் தலைமையில் போராட்டம்
இந்த நிலையில், சசிபெருமாள் மரணமடைந்ததை அடுத்து, கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று திரண்டு தங்கள் ஊரில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். பொதுமக்களின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டக்களத்தில் இறங்க வைகோவின் தாயார் மாரியம்மாள் முன்வந்தார்.
தள்ளாத வயதிலும்
தள்ளாத வயதிலும் போராட முன் வந்த அவரை வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரன் அழைத்துக் கொண்டு ராஜபாளையம்- கோவில்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் மதுக்கடையை மூடக்கோரி கோஷங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்ததால் அந்த பகுதியில் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
கடும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நடந்த நிலையில் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி கொடுத்தாமல் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தள்ளுமுள்ளு பதற்றம்
போக்குவரத்தை சரிபடுத்துவதற்காக பொதுமக்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது.
No comments:
Post a Comment