இந்தியா-வங்கதேசம் நடுவேயான நில எல்லை ஒப்பந்தம் சுமார் 40 வருடங்களுக்கு பிறகு நேற்று இரவு அமலுக்கு வந்துள்ளது. கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருந்த சுமார் 60 ஆயிரம் மக்கள், தற்போது தங்களுக்கென்று நாடு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை பெற்றபோது ‘கிழக்கு பாகிஸ்தான்' என்று அழைக்கப்பட்ட பகுதியுடனான நில எல்லை, சர்ச்சைக்கிடமான வகையில் பிரிக்கப்பட்டது. இந்திய நிலப் பகுதிக்குள் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சொந்தமான நிலத் திட்டுகளும், கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்தியப் பகுதித் திட்டுகளும் சிக்கின. இதனால், பரஸ்பரம் இரு நாடுகளுமே எந்த வகையிலும் நிர்வகிக்க முடியாத தீவுத் திட்டுகள் பல ஏற்பட்டுவிட்டன.
எந்த ஒரு நாட்டின் சட்டப்படியான உரிமைகளையும் பெற முடியாமல், எந்த நாட்டாலும் சொந்த மக்களாகப் பார்க்கப்படாமல் வேற்றுக் கிரகவாசிகளைப் போலவே இந்தத் திட்டுவாசிகள் தனித்து விடப்பட்டார்கள். இந்தியாவுக்குச் சொந்தமான 111 நிலத் திட்டுகள் மொத்தம் 17,160 ஏக்கர்கள், வங்கதேச நில எல்லையால் சூழப்பட்டிருந்தன. வங்கதேசத்துக்குச் சொந்தமான 51 நிலத் திட்டுகள், மொத்தம் 7,110.02 ஏக்கர்கள் இந்திய நில எல்லையால் சூழப்பட்டிருந்தன. இந்த நிலத் திட்டுகளைப் பரஸ்பரம் ஒப்படைத்துக்கொள்ளவே இரு நாடுகள் மத்தியிலும் 1974ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. சமீபத்தில் வங்கதேசம் சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, ரூ.3048 கோடி பேக்கேஜை மத்திய அரசு அறிவித்தது. இவ்வாண்டு ஜூலை 31ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள், மக்களின் இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று இடமாற்ற பணிகள் தொடங்கின. வங்கதேச நிலப் பகுதிக்குள் சிக்கிய 37,000 இந்தியர்கள் இந்திய நில எல்லைக்குள் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் தேசிய கீதம் இசைத்தும், வந்தே மாதரம் பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல வங்கதேச எல்லைக்குட்பட்ட பகுதிக்கு சென்ற 14 ஆயிரம் பேருக்கும் நாடு கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இந்திய குடிமக்களாக இருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், உலகின் மிகப்பெரிய எல்லைப் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment