தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மகாராஷ்டிர ஆளுநரும் அவரின் கருணை மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பிய கருணை மனு மீது எடுக்கப்படும் முடிவை கொண்டே யாகூப் மேமன் உயிர் பிழைப்பாரா அல்லது, தண்டனையை அனுபவிப்பாரா என்பது தெரியவரும். 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புள்ள யாகூப் மேமனுக்கு கீழ் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, இம்மாதம் 30ம் தேதி, யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அவர் அடைக்கப்பட்டுள்ள நாக்பூர் சிறை நிர்வாகம் அறிவித்தது.
தீர்ப்பை எதிர்த்து யாகூப் மேமன் தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆயினும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேமன் மனு தாக்கல் செய்தார். அதில், தான் ஏற்கனவே 20 வருடங்களை சிறையில் கழித்துவிட்டதாலும், மன நோய் இருப்பதாலும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், சுப்ரீம் கோர்ட்டில் தான் தாக்கல் செய்த சீராய்வு மனு சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேமனின் புதிய மனு மீது நீதிபதிகள் தாவே மற்றும் குரியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது. தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து, சீராய்வு மனுவை உரிய வகையில் விசாரிக்க வேண்டும் என்று குரியன் தீர்ப்பளித்தார். ஆனால், நீதிபதி தாவே, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தடையில்லை என்று தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகள் பெஞ்ச் அளித்த மாறுபட்ட தீர்ப்பால், இன்று 3 நபர் பெஞ்ச், இந்த வழக்கை விசாரித்தது. இந்த பெஞ்ச், யாகூப் மேமன் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. சட்டப்படி, உரிய வகையில் விசாரணை நடத்தப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துவிட்டது. எனவே, தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடையும் விதிக்க முடியாது என்று அறிவித்தது.
இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், யாகூப் மேமன் அளித்திருந்த கருணை மனுவை மராட்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், தள்ளுபடி செய்தார். உச்ச நீதிமன்றமும், தூக்கு தண்டனைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், ஆளுநரும் கருணை மனுவை தள்ளுபடி செய்துவிட்டதால், யாகூப் மேமனுக்கு ஏறத்தாழ அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. குடியரசு தலைவரிடம் அவர், அளித்துள்ள கருணை மனு மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. குடியரசு தலைவர் அதை இன்றுக்குள் டிஸ்மிஸ் செய்தால், யாகூப் மேமன் நாளை காலை 7 மணிக்கு நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்படுவார். ஒருவேளை குடியரசு தலைவர் எந்த முடிவையும் எடுக்காமல் தாமதித்தால், நாளை தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. எனவே, அனைவரது பார்வையும் குடியரசு தலைவர் மீதே உள்ளது. இதனிடையே, யாகூப் மேமன் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தி வருகிறார். அநேகமாக உள்துறை அமைச்சகமும், யாகூப் மேமன் தண்டனைக்கு பச்சைக் கொடி காண்பிக்கும் என்றே தெரிகிறது.
No comments:
Post a Comment