ராமேஸ்வரத்தில் வைக்கப்பட்டுள்ள மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகழ் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த 27ஆம் தேதி இரவு மாரடைப்பினால் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் அப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ராமேஸ்வரத்தில் கண்ணீர் கடல்
இதையடுத்து, டெல்லியில் இருந்து அப்துல் கலாமின் உடல் இன்று ராணுவ விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கொண்டு வரப்பட்டது. மண்படத்தில் இருந்து ராணுவ வாகனம் மூலம் அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அப்துல் கலாம் உடல் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அமைச்சர்கள் அஞ்சலி
அப்துல் கலாம் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் மனோகர் பரிக்கர், வெங்கயா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, உதயகுமார், சுந்தர்ராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்டாலின் அஞ்சலி
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி ஆகியோரும் அஞ்சலி அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அப்துல் கலாம் படித்த எம்.ஐ.டிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மணிமண்டபம் கட்டவேண்டும்
'சென்ற நாடுகளில் எல்லாம் தாய்மொழிக்கு பெருமை சேர்த்தவர் அப்துல் கலாம். இளைஞர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் அடக்கம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
வைகோ, தமிழிசை அஞ்சலி
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், வக்போர்டு தலைவர் தமிழ்மகன் உசேன், ஆகியோரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எளிமை, நேர்மை, அன்பு, அடக்கத்திற்கு பெயர் பெற்றவர் அப்துல் கலாம் என்று புகழாரம் சூட்டினார். உலகம் உள்ளவரை அவரது பெயர் நிலைத்திருக்கும் என்றார் வாசன்.
கண்ணீர் விட்ட விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், ஏராளமான தேமுதிக தொண்டர்கள் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தினார். அப்துல் கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைக்கும் போது விஜயகாந்த் துக்கம் தாளாமல் அழுதார். அருகில் இருந்த அவரது மனைவி பிரேமலதாவும் அழுதார். இருவரையும் சுற்றியிருந்தவர்கள் தேற்றினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்துல்கலாம் தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து என்று புகழாரம் சூட்டினார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அஞ்சலி
தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்தார் அப்துல் கலாம் என்று புகழாரம் சூட்டினார்.
வைரமுத்து கண்ணீர்
கவிஞர் வைரமுத்து அப்துல் கலாம் உடலை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அஞ்சலி செலுத்திய அவர், இந்துக்களின் புனித பூமியான ராமேஸ்வரம் இனி இந்தியாவின் புனித பூமியாகும் என்றார். 83 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரத்தில் ஒரு குழந்தை அழுது கொண்டே பிறந்தது. இன்றைக்கு அவரது மறைவுக்கு இந்தியாவே அழுகிறது என்று கூறினார் வைரமுத்து.
கலாம் சகோதரர் கண்ணீர்
அப்துல் கலாமின் சகோதரர் முத்து முகமது மீரான் மரைக்காயர், கலாமின் உடலை கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பேரன்களும், உறவினர்களும் கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினர்.
டிகர் விவேக் அஞ்சலி
அப்துல் கலாம் மீது அளவற்ற பற்று கொண்ட நடிகர் விவேக், தனது உதவியாளர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், இன்றைய இளைஞர்களின் சூப்பர் ஸ்டார் அப்துல்கலாம் என்று புகழாரம் சூட்டினார்.
நீதிமன்றங்களுக்கு நாளை விடுமுறை
தமிழகத்தில் உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களுக்கும் நாளை விடுமுறை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன். கலையரசன் கூறியுள்ளார்.
லட்சக்கணக்கானோர் காத்திருப்பு
அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரத்தில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான மாணவர்களும் குவிந்துள்ளனர். மண்ணின் மைந்தன் உடலுக்கு இன்று இரவுக்குள் அனைவரும் அஞ்சலி செலுத்திவிட முடியுமா என்று ஒருவித எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
இறுதிச்சடங்கு
அப்துல் கலாமின் உடல், ராமேசஸ்வரத்தில் இஸ்லாமிய முறைப்படி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் பங்கேற்க நாளை 10.30 மணிக்கு பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தர உள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment