தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை இரு நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் சிறப்பு மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் விடுதலையை ரத்து செய்யக் கோரியும், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து 6 தனியார் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தார். இந்த மனுக்களில் உள்ள குறைகள் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு, இரு தரப்பும் திருத்தப்பட்ட மனுக்களை தாக்கல் செய்தன. இம்மனுக்களுக்கு குற்றவியல் வழக்கு எண்கள் ஒதுக்கப்பட்டன. ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மனுவின் விசாரணை விவரங்கள் குறித்த பட்டியல் வரும் 27-ந் தேதி வெளியிடப்படும் என பதிவாளர் அலுவலகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இருநீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே. அகர்வால் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment