சன் குழும அதிபர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான கல்கேபிள்ஸ் நிறுவனத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 வார காலத்துக்குள் கல்கேபிள்ஸ் நிறுவனம் பதில் மனுவைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் நகரங்களில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவை அளிப்பதற்கான லைசென்ஸை கல் கேபிள் நிறுவனம் பெற்றிருந்தது. இந்த லைசென்ஸ் மூலமே எஸ்.சி.வி. கேபிள் நிறுவனத்தை சன் குழுமம் நடத்தியும் வந்தது.
ஆனால் கல்கேபிள்ஸ் நிறுவனத்துக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இதனால் அதற்கு வழங்கப்பட்டிருந்த லைசென்ஸை ரத்துசெய்து மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே கல்கேபிள்ஸ் சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம், கல்கேபிள்ஸ் நிறுவனத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அக்னிஹோத்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாறன் சகோதரர்களுக்கும் கல்கேபிள்ஸ் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்ற கருத்தின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பளித்திருப்பது தவறு என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு கல்கேபிள்ஸ் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்தான் சன் குழுமத்தின் 40 பண்பலைகள், 33 சேனல்களுக்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு சான்றிதழ் வழங்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment