ப்ரீகேஜி பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜூலை 22ம் தேதிக்குள் தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று மெட்ராஸ் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973ன்கீழ், மாநிலத்தில், 760 பிளே ஸ்கூல்கள் மூடப்பட்டதை எதிர்த்து, வில்லிவாக்கத்தை சேர்ந்த கே.பாலசுப்பிரமணியம் என்பவர், சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப்ரீகேஜி பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் என்ன என்பதை வரைவாக (டிராப்ட்) தயாரித்து அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்பேரில், அரசு வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், வரைவை தாக்கல் செய்தார். அந்த வரைவில், பிளே ஸ்கூல்கள் நடத்த வேண்டுமானால், அங்கு விளையாட்டு மைதானம் அவசியம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து வியந்த, நீதிபதிகள், 3 வயதுள்ள குழந்தைகள் பயிலும் பிளே ஸ்கூலுக்கு எதற்கு மைதானம் என்று கேள்வி எழுப்பினர். மேலும், தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளிலேயே மைதானங்கள் இல்லையே, அப்படியிருக்கும்போது பிளேஸ்கூலுக்கு மைதானம் அவசியம் என்று எப்படி சொல்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர். பிளே ஸ்கூல்கள் மற்றும் ப்ரீகேஜி பள்ளிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் என்ன என்பதை ஜூலை 22ம் தேதிக்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment