ஐ.பி.எல். முன்னாள் தலைவரும் லண்டனில் தலைமறைவாக இருக்கும் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் நெருக்கடி அதிகரித்துள்ளதால் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உருவாக காரணமாக இருந்த லலித்மோடி 2008-ம் ஆண்டு முதல் 2010 வரை தலைவராக பணியாற்றினார். நிதி முறைகேடு செய்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.
ஊழல் புகார் கூறப்படும் போதே அவர் இந்தியாவில் இருந்து தலைமறைவாகி லண்டனில் குடியேறினார். அவர் மீது ரூ.700 கோடி அன்னிய செலவாணி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இதனிடையே மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் லலித் மோடிக்கு உதவியதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருந்தது. லலித்மோடிக்கு இங்கிலாந்தில் இருந்து போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்ல பயண ஆவணங்களை பெறுவதற்கு சுஷ்மா சுவராஜ் உதவி புரிந்துள்ளார். இதை தொடர்ந்து சுஷ்மா ஸ்வராஜ் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
லலித் மோடிக்கு உதவியதை ஒப்புக்கொண்ட அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியை பார்க்க செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் விவகாரம் வெடித்ததற்கு பாரதிய ஜனதாவின் உட்கட்சி பூசலே காரணம் என்றும் தகவல் வெளியானது. இத்தகவலை பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. கீர்த்தி ஆசாத் அம்பலப்படுத்தினார். இந்த விவகாரம் தற்போது ஓயாது என்ற நிலையில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இதனை விரும்பவில்லை எனவும் சுஷ்மா அமைச்சராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருவதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment