இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவியதால் சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவரான கோவிந்தாச்சார்யா வலியுறுத்தியுள்ளார். சர்ச்சையில் சிக்கிய சுஷ்மா மற்றும் வசுந்தரராஜே ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால் பாரதிய ஜனதாவும் மத்திய அரசும் தொடர்ந்தும் இருவரையும் ஆதரிக்கிறது.
இந்த விவகாரத்தில் இதுவரை இருவருக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் ஆதரவளித்து வந்தது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியோ, தம் மீது புகார் கூறப்பட்ட போதே ராஜினாமா செய்துவிட்டேன்.. மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டவர்கள் தொடர்ந்தும் பதவியில் நீடிக்கக் கூடாது என கூறியிருந்தார். இது பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவரான கோவிந்தாச்சார்யா, சுஷ்மாவும் வசுந்தர ராஜேவும் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர் லால் பகதூர் சாஸ்திரி, சரத் யாதவ் என பலரும் முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள்.. என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment