விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி ஆட்சி தொடர்பான கருத்தரங்கிற்கு ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். இது அவரது தேர்தல் அரசியல் வியூகம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். பிரச்சார மேடைகளில் காது கூசும் அளவிற்கு எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிப்பதும், பின்னர் தேர்தல் சமயங்களில் ‘அது நாற வாய், இது வேற வாய்' ரேஞ்சுக்கு சால்வை போர்த்தி கூட்டணி வைப்பதும் அரசியலில் சகஜமான காட்சிகள்.
இவ்வாறு கூட்டணி வைப்பதற்கு பெரும்பாலும் தலைவர்கள் ஏதேனும் பொதுக்காரணம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் கர்நாடக அணை தொடர்பாக திமுக, பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்களைச் சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரைத் தொடர்ந்து, திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது சகோதரர் மகன் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுத்து விஜயகாந்த், ராமதாஸ், அன்புமணி, வைகோ, சுப்பிரமணியன் சாமி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்தார். இந்த வரிசையில் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் சேர்ந்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்பது தான் திருமாவளவனும் கோரிக்கை. இதனை வலியுறுத்தி இம்மாதம் 9ம் தேதி கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளைத் தவிர மற்றக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு வருகிறது. இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை உள்ளிட்டோரை திருமாவளவன் சந்தித்துள்ளார். ‘இனிவரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறைதான் வரவேண்டும். ஒரு கட்சியில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தால்கூட அவருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும்' என உத்திரபிரதேசத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் காய் நகர்த்த முயற்சிக்கிறார் திருமாவளவன். இதற்காகத் தான் இந்த சந்திப்புகளும், கருத்தரங்கும் என்கிறது அரசியல் வட்டாரத் தகவல். மேலும், இதன் மூலம் ஆட்சியில் பங்குங்கிறதை அழுத்தமா வலியுறுத்தி திமுக, அதிமுகவின் கவனத்தைத் திருப்ப திருமாவளவன் வகுத்துள்ள ‘அரசியல் வியூகம்' இது என்கிறார்கள் அவர்கள்.
No comments:
Post a Comment