சென்னை ஐஐடியில் அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்துள்ளதற்கு திமுக மகளிரணிச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி அதிருப்தி தெரிவித்துள்ளார். ஐஐடியில் நல்ல தொழில்நுட்பத்தை பயிற்றுவிப்பதோடு நல்ல சமூகத்தை கட்டமைப்பதை கற்றுக்கொடுக்கவேண்டும் என்று அவர் ஐ.ஐ.டி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள தாம், தமிழகத்திற்காகவும், பிறந்த மண்ணிற்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கனிமொழி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை ஐ.ஐ.டியில் உள்ள அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டம் ஜாதி இயக்கமல்ல. தன்னார்வ மாணவர் மூலம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு சமூக விசயங்களை விவாதித்துள்ளது. இந்த நிலையில் அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாகும். பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதியைக் கொடுத்த தமிழகத்தில் இதுபோல நடந்திருப்பது சோகத்தைத் தருகிறது. இந்த வாசகர் வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது நியாயமற்ற ஒன்றாகும். யாரோ முகம் தெரியாத ஒருவர் மத்திய மனிதவள ஆணையத்திற்கு எழுதிய கடிதத்திற்காக, ஐ.ஐ.டி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டாம். இது ஜனநாயகத்தின் ஆணிவேரையே அசைக்கும் செயலாகும். பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தாங்கள் நினைத்ததை சுதந்திரமாக பேச முடியாது. ஆனால் ஐஐடியில் அதற்காக இடம் அளித்து மாணவர்களிடையே நேர்மையான அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற அச்சமும், பயமும் இன்றி விவாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பது தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் நிரூபிக்கப்பட்ட உண்மை. நேற்றைய மாணவர்கள்தான் இன்றைய அரசியல் தலைவர்களாக சாதித்துக் கொண்டிருக்கின்றனர். கல்லூரியில் படித்த போது இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள்தான் இன்றைக்கு தலைவர்களாக உள்ளனர். இன்றைக்கு மாணவர்கள் நெட் நியூட்ராலிட்டி முதல் பலவித விசயங்களில் சமூக போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இன்றைக்கு கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்த எழுதிய எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் பல்வேறு சகிக்கமுடியாத நெருக்கடிகளை இன்னல்களை சந்தித்தனர். அதேபோல ‘தாலி' பற்றிய நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சி சேனல் தாக்குதலுக்கு ஆளானது. இது அடிப்படை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும். எனவே அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மீண்டும் அங்கீகாரம் அளிக்கவேண்டும். மேலும் இந்த அமைப்பை தொடங்கிய, இயங்கி வந்த மாணவர்கள் மீது எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது. ஐஐடியானது சிறந்த தொவில்நுட்பத்தை மட்டும் தராமல், சிறந்த சமுதாயத்தையும் கட்டமைக்க வேண்டும் என்று கனிமொழி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment