ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தானும் போட்டியிட போவதாக காந்தியவாதி சசிபெருமாள் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி களமிறங்கியுள்ள நிலையில் காந்தியவாதி சசி பெருமாளும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட இ.மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சசிபெருமாள் (வயது 59). காந்தியவாதியான இவர், கடந்த சில ஆண்டுகளாக மது ஒழிப்பை வலியுறுத்தி தீவிர பிரசார இயக்கம் நடத்தி வருகிறார்.
இந்த கருத்தை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நடைபயணம், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார். மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டங்கள் நடத்திய இவர், சமீபத்தில் சிதம்பரத்தில் மதுபானக்கடையை மூட வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். இந்நிலையில் சசிபெருமாள் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக நேற்று திடீரென அறிவித்தார். இதுதொடர்பாக சசிபெருமாள் இளம்பிள்ளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேசிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளேன். இந்த தேர்தலின் போது, என்னுடைய பிரதான கொள்கையான மது ஒழிப்பை வலியுறுத்தும் வகையில், மது ஒழிப்பு வேட்பாளராக களம் இறங்குகிறேன். வருகிற 5ஆம்தேதி (வெள்ளிக்கிழமை) நான் மனு தாக்கல் செய்ய உள்ளேன். மேலும் எனக்கு ஆதரவு அளிக்க கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் ஆதரவு திரட்ட உள்ளேன் என்று கூறினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒருபுறம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, மறுபுறம் காந்தியவாதி சசிபெருமாள் என ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment