கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக 8 தீயணைப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். மேலும் 100 சிஐஎஸ்எப் வீரர்கள் பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்(சிஐஎஸ்எப்) மற்றும் விமான நிலைய பணியாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் சிஎஸ்ஐஎப் வீரர் ஒருவர் பலியானார். 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மோதல் குறித்து கேரள ஏ.டி.ஜி.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோதல் நடந்த போது விமானநிலைத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அத்துமீறி தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதே இந்த மோதலுக்கான முக்கிய காரணம் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஞ்சரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்களை, 27ம் தேதி வரை ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். மேலும், இந்த மோதல் தொடர்பாக பாதுகாப்பு படை வீரர்கள் 100 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெங்களூருக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் உடனடியாக பெங்களூரு செல்லுமாறு சிஐஎஸ்எப் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் 25 சிஐஎஸ்எப் வீரர்கள் மீது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தீயணைப்பு வீரர்களும் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. அதேபோல், மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சீதாராம் சவுத்ரி என்பர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது காமிரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த மோதல் தொடர்பாக முதல் கட்ட விசாரணை பற்றிய விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment