Latest News

ஜெயலலிதா தீர்ப்பு! முழு விவரம்!! நகல் இணைப்பு


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இன்று தீர்ப்பு வழங்கினார்.  18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 3 நிமிடங்களில் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை வாசித்து விட்டு சென்றுவிட்டார்.

சரியாக காலை 11 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி, தீர்ப்பை வாசிக்க தொடங்கிய உடன், “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்” என்றார்.

தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், “சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்” என்றார்.


மேலும், வருமானத்தைவிட 10 விழுக்காடுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அது குற்றமாகும். ஆனால் ஜெயலலிதா வருமானத்தை விட 8.12 விழுக்காடு மட்டுமே கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார்.

இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். எனவே ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளுக்கும், அரசுத் தரப்பு ஆதாரங்களுக்கும் முரண்பாடு உள்ளது.

வருமான வரி தொடர்பான வாதத்தை கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கிக் கடன்களை கீழ் நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்று தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று நீதிபதி குமாரசாமி அளித்த 919 பக்க தீர்ப்பில் “குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்களுடன், நிறுவனங்கள் மற்றும் பிற சொத்துக்களை சேர்த்து கட்டுமான மதிப்பான ரூ.27,79,88,945 என்ற தொகையுடன் திருமண செலவு தொகையான ரூ.6,45,04,222-ஐயும் சேர்த்து அவரது சொத்து ரூ.66,44,73,573 என்று அரசு தரப்பு சேர்த்துக் கூட்டி சொத்து மதிப்பை நிர்ணயித்துள்ளது. எனவே கூடுதலாக சேர்க்கப்பட்ட கட்டுமான மதிப்புத் தொகையையும், திருமண செலவு தொகையையும் நீக்கிவிட்டால், சொத்துக்கள் மதிப்பு ரூ.37,59,02,466 ஆக உள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்கள், நிறுவனங்கள் மற்றும் பிற வருவாயோ ரூ.34,76,65,654 ஆக உள்ளது. எனவே வருவாய்க்கு அதிகமாக ரூ.2,82,36,812 மதிப்புடைய சொத்துக்களே உள்ளன. வருவாய்க்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12%. இது ஒப்பிடுகையில் மிகச்சிறிய தொகையே” என்று ஆவணங்களை ஆய்வு செய்ததில் கோர்ட் முடிவுக்கு வந்துள்ளது.

கீழ்கோர்ட்டு தனது தீர்ப்பில் குற்றவாளிகள் இந்தியன் வங்கியில் கடன் வாங்கினார்கள் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அதை அவர்களின் வருமானமாக கருதவில்லை. அதனால் கடனை வருமானமாக கருதாமல் கீழ்கோர்ட்டு தவறு செய்துள்ளது. கீழ்கோர்ட்டு சுதாகரன் திருமண செலவை ரூ.3 கோடி என்று மதிப்பிட்டுள்ளது. இந்த தொகையை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் ஜெயலலிதா மீது சுமத்தியது தவறு.ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும்போது, கீழ் கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கு சொல்லியுள்ள ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. சட்டத்தில் கீழ்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் வலிமையாக இல்லை

மேலும் தீர்ப்பு விவரத்தை ஆங்கிலத்தில் படிக்க கீழே க்ளிக் செய்யவும்:

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.