தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல்- ஆதார் இணைப்பு மூன்றாம் கட்ட முகாமில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதுவரை 4.73 கோடி வாக்காளர்கள் விவரங்கள் பெறப்பட்டுள்ளன’’ என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
நாடுமுழுவதும் பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் நோக்கில், தேசிய அளவிலான வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இத்திட்டப்படி வீடுவீடாக வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று ஆதார் எண், கைபேசி எண், இ-மெயில் முகவரி பெறுதல் மற்றும் திருத்தம், பெயர் சேர்த்தல் நீக்குதல் தொடர்பான விண்ணப்பங்களை பெறும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் விவரங்களை அளிக்கமுடியாதவர்களுக்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. இந்த வகையில் நேற்று 10ம் தேதி மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடந்தது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
தமிழகத்தில் 10ம் தேதி நடந்த முகாமில் மட்டும் 10 லட்சம் பேர் விவரங்களை அளித்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் உள்ள 5.62 கோடி வாக்காளர்களில் 4.73 கோடி (84 சதவீதம்) வாக்காளர்கள் ஆதார் விவரங்கள பெறப்பட்டு அதில், 3.54 கோடி (64 சதவீதம்) வாக்காளர்கள் விவரங்கள் கணினியில் பதியப்பட்டுள்ளன.
அடுத்த கட்ட முகாம் மே மாதம் 24ம் தேதி நடக்கிறது. இந்த மாதம் 31ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். 10ம் தேதி முகாமில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பாக 85 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மூன்று முகாம்கள் மற்றும் நேரடியாக விவரங்கள் சேகரித்த வகையில் இதுவரை 10.58 லட்சம் விண்ணப்பங்கள் பல்வேறு பிரிவுகளில் வந்துள்ளன. இவற்றில் 51 சதவீதம் அதாவது 5.25 லட்சம் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
No comments:
Post a Comment