சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டம் 03.03.2015 முதல் சென்னை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ளது. வாக்குச்சவாடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று, வாக்காளர்களின் அதார் அட்டை எண், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் விவரங்களைச் சேகரித்து வருகிறார்கள்.
வருகை தரும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை இருப்பின் அதன் நகல், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அளிக்கும்படி கோரப்படுகிறது. ஆதார் அட்டை இல்லாத வாக்காளர்களும் இந்த திட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்யலாம்.
மேலும், மேற்படி விவரங்களை வாக்காளர்கள் தாமாகவே www.nvsp.in என்ற இணையதள முகவரியிலோ, 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்து பயன்பெறலாம்.
இத்திட்டம் தொடர்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் வாக்காளர்கள் நேரில் ஆஜராகி விவரங்களைத் தெரிவிக்கலாம்.
வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் ஒரு முறைக்கு மேல் இடம் பெற்றிருந்தால், அதனை நீக்க படிவம் 7ம், ஏற்கனவே உள்ள பதிவுகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8ம் ஒரு தொகுதிக்குள் இருப்பிட முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து, அத்துடன் தங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் மற்றும் ஆதார் அட்டை எண் நகலை இணைத்து, சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர்கள் அனைவரும் நாளை நடைபெற உள்ள சிறப்பு முகாம் வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment