தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நாளை கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. காலையில் நடைபெறும் கூட்டத்தைத் தொடர்ந்து பிற்பகலில் தலைவர்கள் சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார். நாளையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் எப்போது முதல்வராக பதவியேற்பார் என்ற தேதி தெரிய வரும். முன்னதாக அவர் நாளை மறு நாள் 23ம் தேதி பதவியேற்பார் என்று நடிகையும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான சி.ஆர். சரஸ்வதி கூறியிருந்தார். ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று அவர் பின்னர் தெளிவுபடுத்தினார்.
ஆளும் கட்சியின் தலைவராக ஜெயலலிதாவைத் தேர்வு செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தக் கட்சி ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை, ஆளுநர் கே.ரோசய்யாவைச் சந்தித்து ஜெயலலிதா அளிப்பார் எனத் தெரிகிறது. அதற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குப் பின்னர் பிற்பகலில் எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் ஜெயலலிதா. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதியன்று ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. 21 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த பின்னர் கடந்த 7 மாதங்களாக போயஸ் தோட்டத்து வீட்டை விட்டு அவர் வெளியேறியதே இல்லை. அண்மையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட பின்னர்தான் போயஸ் தோட்டத்தில் கடந்த சில நாட்களாக முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் ஜெயலலித நேரில் சந்தித்து பேசி வருகிறார்.
No comments:
Post a Comment