தொழில் நகரமான கோவையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ஒரு கும்பல் தீவிரமாக முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கள்ளநோட்டு தடுப்பு பிரிவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் களத்தில் இறங்கினர்.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏட்டுகள் வேலுச்சாமி, கமலநாதன் மற்றும் போலீசார் கோவை–திருச்சி ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்த சூட்கேசை திறந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேசுக்குள் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 170–ம் (85 ஆயிரம் ரூபாய்), 100 ரூபாய் நோட்டுகள் 150–ம் (15 ஆயிரம்) இருந்தன.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் கள்ள நோட்டுகளுடன் வந்த அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த அன்பரசு(வயது 32) என்று தெரிய வந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரித்த போது திடுக் தகவல்கள் வெளியானது. திருப்பூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தான் என்னிடம் கள்ள ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார். இந்த சூட்கேசை கோவை ரெயில் நிலையம் அருகே நிற்கும் ஒருவரிடம் நீ கொடுக்க வேண்டும்.
நீ அங்கு சென்றவுடன் அந்த நபர் உன்னை செல்போனில் அழைப்பார். அவரிடம் கொடுத்து விட வேண்டும். அப்படிச்செய்தால் உனக்கு ஒரு தொகையை கமிஷனாகத்தருகிறேன் என்றார்.
அதன்படிதான் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் வந்தேன் என்றார். கள்ள நோட்டுகளுடன் சிக்கிய வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் ரெயில் நிலையம் அருகே வந்தனர்.
கைதானவர் கொடுத்த போன் நம்பரில் தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. மேலும் திருப்பூர் சென்று கும்பல் தலைவனை பிடிக்க முயன்றனர்.
இந்த தகவல் அறிந்த பாஸ்கர் அதற்குள் தலைமறைவாகி விட்டார். திருப்பூரில் தான் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக தெரிகிறது. கள்ள நோட்டு எங்கு அச்சடிக்கப்படுகிறது என்பதை அறிய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கும்பல் தலைவனை பிடிக்கவும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment