Latest News

  

பள்ளிக்கூட வாகனங்களில் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் தமிழக அரசின் 3 துறைகள் இணைந்து உத்தரவு

Add caption

இந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூட வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகளை தமிழக அரசின் 3 துறைகள் வெளியிட்டு உள்ளன.

22 விதிமுறைகள்

மாணவர்களை, அவர்களது வீட்டில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கும், பள்ளிக்கூடங்களில் இருந்து வீடுகளுக்கும் ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் பஸ்-வேன் போன்ற வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசின் போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வி மற்றும் வருவாய் துறைகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பான முறையில் மாணவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறையோடு செயல்படும் தமிழக அரசு, இந்த விதிமுறைகளை வகுத்துள்ளது.

அனுபவமிக்க டிரைவர்கள்

அதன்படி, பள்ளிக்கூட வாகனங்களில் உள்ள மாணவர்கள் உட்காரும் இருக்கைகளின் உயரம் குறைக்கப்பட வேண்டும், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும், வாகனங்களின் வடிவமைப்பு உறுதியானதாக இருக்க வேண்டும், அவசர கால நேரங்களில் வாகனங்களில் இருந்து எளிதாக வெளியேறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும், அனுபவமிக்க டிரைவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்பட 22 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அனைத்து பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களும் இந்த 22 விதிமுறைகளை பின்பற்றி, உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்து துறையிடம் இருந்து 30-ந்தேதிக்குள் (சனிக்கிழமை) உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உரிமம் ரத்து செய்யப்படும்

அந்த பரிசோதனையின் போது, ஏதாவது குறைபாடு இருந்தால் 1 வார காலம் அவகாசம் கொடுக்கப்படும். அதிலும், இந்த குறைபாடு சரி செய்யப்படவில்லை என்றால் வாகனங்களின் உரிமம் (பெர்மிட்) ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகமும் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவ்வப்போது பரிசோதனை நடத்துவார்கள். அதில் சிறு விதிமீறல் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காக்கி சீருடை

இந்த விதியின்படி, பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதற்கு முந்தைய ஒரு வருட காலத்தில் சிக்னல் மீறல், வரையறுக்கப்பட்ட வழியில் செல்லாமை உள்ளிட்ட சிறிய போக்குவரத்து குற்றங்களில் கூட 2 முறைக்கு மேல் அபராதம் கட்டியிருக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மிக வேகம் (ஓவர் ஸ்பீடு), குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மரணத்தை விளைவிக்கும் வகையில் விபத்து ஏற்படுத்தியிருத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஒரு முறை கூட தண்டிக்கப்படாதவராக இருக்க வேண்டும். மேலும், டிரைவர்கள் காக்கி சீருடை தான் அணியவேண்டும் என்றும் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

பெண் உதவியாளர்

பள்ளிக்கூட வாகனங்களில் இருக்கும் உதவியாளர்களை பொறுத்தமட்டில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் 21 வயதில் இருந்து 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுத்தத்திலும் வாகனங்கள் நிற்கும் போது முதலில் இறங்கி, வாகனங்களில் இருந்து மாணவர்களை ஏற்றி, இறக்கும் வகையில், எல்லா உதவிகளும் செய்யும் வகையிலும் மருத்துவ ரீதியாக தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.

மாணவிகள் செல்லும் வாகனங்கள் எனில் கண்டிப்பாக பெண் உதவியாளர் இருக்க வேண்டும் என்றும் அந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.