கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தியாகராயநகர், பாரிமுனை பகுதிகளில் ஹாங்ஹாங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளது போல் பொதுமக்கள் நடந்து செல்ல ஆகாய நடைபாலம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்க
தியாகராயநகர் என்றாலே நம்முடைய அனைவரின் நினைவுக்கு வருவது ‘ஷாப்பிங்’ தான். அந்த அளவுக்கு அந்த பகுதிகளில் கடைகள் ஏராளமாக உள்ளன. இதனால் அந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதேபோல், பாரிமுனை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும். பொதுமக்கள் அதிகம் நடமாடும் இந்த 2 இடங்களிலும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆகாய நடைபாலம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வுப்பணிகள் முடிவு பெற்று, அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, பின்னர் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தியாகராயநகர், பாரிமுனை
தியாகராயநகர், பாரிமுனை ஆகிய 2 இடங்களிலும் அமைக்கப்பட உள்ள இந்த ஆகாய நடைபாலம், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ளது போல் அதிநவீன முறையில் கலைநயத்துடன் அமைக்கப்பட இருப்பது மேலும் சிறப்பம்சம் ஆகும்.
பாரிமுனை பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்த ஆகாய நடைபாலம், கோட்டை ரெயில் நிலையத்தில் ஏற்கனவே உள்ள இரும்பு பாலத்தில் இருந்து இந்த பாலம் இணைக்கப்பட்டு, அங்கிருந்து என்.எஸ்.சி.போஸ் சாலை, பூக்கடை போலீஸ் நிலையம், பாரிமுனை பஸ் நிலையம், சென்னை ஐகோர்ட்டு ஆகியவற்றின் வழியாக சென்னை கடற்கரை வரை செல்லும்.
கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் இந்த ஆகாய நடைபாலம் 1.6 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
போக்குவரத்து இடையூறு…
இந்த பகுதிகளில் சென்னை ஐகோர்ட்டு உள்பட பாரம்பரியமிக்க கட்டிடங்கள் அதிகம் இருப்பதால், இங்கு அமைக்கப்பட உள்ள ஆகாய நடைபாலத்தில் பாரம்பரியமிக்க கட்டிடங்களின் முகப்பு தோற்றத்தை கொண்ட ‘டிசைன்கள்’ வடிவமைக்கப்பட உள்ளன.
ஆகாய நடைபாலம் அமைக்கப்பட்டால், சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பாரிமுனை பஸ் நிலையம், என்.எஸ்.சி.போஸ் ரோடு, ஐகோர்ட்டு, சென்னை கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் இந்த நடைபாலம் மூலம் எந்தவித போக்குவரத்து இடையூறும் இல்லாமல் எளிதாக சென்று வருவதற்கு ஏதுவாக அமையும்.
இதில் 2 விதமான பாதைகள் அமைக்கப்பட உள்ளன. அதில் ஒரு பாதை கோட்டை ரெயில் நிலையம்-பூக்கடை, பிறகு அங்கிருந்து சென்னை கடற்கரை ஒரு பாதையும் செல்கின்றன. இந்த நடைபாலத்தில் மொத்தம் 7 இடங்களில் இறங்கி ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளன. அதில் பெரும்பாலான இடங்களில் ‘எஸ்கலேட்டர்’ வசதியுடன் படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன.
ஆகாய நடைபாலம்
அதேபோல், தியாகராயநகர் பகுதியில் அமைக்கப்படும் ஆகாய நடைபாலம், மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராயநகர் பஸ் நிலையம் வரை அமைக்கப்பட உள்ளது. இதன் தூரம் 600 மீட்டர் ஆகும்.
மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி பஸ் நிலையத்துக்கு மாறி கொரட்டூர், கோட்டூர்புரம் உள்பட பிற பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் செல்ல விரும்புபவர்கள் ரெங்கநாதன் தெருவில் நடந்து சென்று பின்னர், அங்கிருந்து பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
ஆனால் இந்த ஆகாய நடைபாலம் அமைக்கப்பட்டால், மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து நேரடியாக தியாகராயநகர் பஸ்நிலையத்துக்கு சென்றுவிடலாம். இந்த 2 ஆகாய நடைபாலங்களும் ‘ஆர்ச்’ வடிவில் அமைக்கப்பட உள்ளது.
வாகன கட்டண நிறுத்துமிடம்
இரவு நேரங்களில் மக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு முற்றிலுமாக வண்ணமயமாக காட்சியளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. இதேபோல், தியாகராயநகர் பனகல்பார்க் அருகில் உள்ள பாஷியம் ரோட்டில் அடுக்குமாடி வாகன கட்டண நிறுத்துமிடம் கட்டப்பட உள்ளது.
அவ்வாறு அமைக்கப்படும் இந்த அடுக்குமாடி வாகனம் நிறுத்தும் இடத்தில் 500 கார்கள், 1,000 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் அடுத்த மாதத்தில் நடக்கும் என்று தெரிகிறது.
கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்து ஆலோசித்த பிறகு, இந்த பணிகள் தொடங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment