நாட்டின் விவசாய சமுதாயத்தை பிரதமர் நரேந்திர மோடி பொய்யான வாக்குறுதிகளை அளித்துக் கைவிட்டு விட்டார். ஏமாற்றி விட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் இவ்வாறு பேசினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த விவசாயிகள் மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 55 நாள் விடுமுறைக்குப் பின்னர் திரும்பியுள்ள துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் முறையாகப் பேசினார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது காங்கிரஸ். 55 நாட்கள் ஓய்வுக்கு பின்பு ராகுல்காந்தி அண்மையில் நாடு திரும்பினார். இந்த நிலையில் அவருடைய தலைமையில் பிரமாண்ட விவசாயிகள் பேரணியாக இது நடைபெற்றது. கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: விவசாயிகளம், கூலித் தொழிலாளர்களும் இன்று பெரும் கவலையில் உள்ளனர். இந்த அரசு தங்களை மறந்து விட்டதாக அவர்கள் அச்சப்படுகின்றனர். நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நிம்மதியாக இன்று விவசாயிகளால் தூங்க முடியவில்லை. அடுத்த நாள் தனது நிலம் இருக்குமா, இருக்காதா என்ற அச்சத்தில்தான் ஒவ்வொரு விவசாயியும் இரவு படுக்கைக்குப் போகிறார். பயத்திலேயே வாழ்கிறார்கள் விவசாயிகள். தொழிலதிபர்களுக்கு முன்பாகவே நமது நாட்டை பலமாக்கியது, வலுப்படுத்தியது விவசாயிகள்தான். அவர்கள்தான் இந்த நாட்டுக்கு உணவூட்டினர். காங்கிஸ் அரசால் எப்போதெல்லாம் முடிந்ததோ, அப்போதெல்லாம் அவர்களுக்கு உதவியது. நாங்கள் எங்களது ஆட்சிக்காலத்தின்போது, ரூ. 70,000 கோடிக்கு மேலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தோம். கூலித் தொழிலாளர்களுக்காக நாங்கள் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தைக் கொண்டு வந்தோம். நாங்கள் செய்த அனைத்துமே ஏழைகளுக்காக செய்வதையாகும். ஏழைகளுக்காகவும், நலிவடைந்த பிரிவினருக்காகவும் நாங்கள் உழைத்தோம். தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்போம், அவர்களுக்காக போராடுவோம். உங்களது போராட்டங்களில் நானும் பங்கேற்பேன். நியாம்கிரியில் நான் ஆதிவாசிகளைச் சந்தித்தேன். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தேன். விவசாயிகளின் சக்தி குறித்து பிரதமருக்குத் தெரியவில்லை. நாட்டில் குவிந்து விட்ட 50 ஆண்டு கால குப்பையை நீக்குவோம் என்று வெளிநாட்டில் பிரதமர் பேசிய பேச்சால் அவருக்கும், அவரது பதவிக்கும் பலன் தரப் போவதில்லை. கெளரவம் சேர்க்கப் போவதில்லை. தேர்தலின்போது தொழிலதிபர்களிடம் கடன் வாங்கினார் மோடி. அதைத் திருப்பிச் செலுத்த தற்போது உங்களது நிலங்களைப் பிடுங்கி அவர்களிடம் தரப் போகிறார். குஜராத் மாடல் அதைத்தான் சொல்கிறது. விவசாயிகளிடமிருந்து எளிதாக நிலத்தைப் பிடுங்கி தொழிலதிபர்களுக்கு கொடுப்பதே குஜராத் மாடலாகும். மேக் இன் இந்தியா என்ற மோடியின் கனவு பலிக்காது. உங்களது நிலத்தைப் பிடுங்குவதே அவர்களது முதல் நோக்கமாக உள்ளது. உங்களுக்கு வேலையில்லாமல் செய்து விடுவார்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அரசாங்கம் கையகப்படுத்தும் நிலத்தை 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதை எடுத்தவரிடமே திரும்பித் தருவோம் என்பதை அமல்படுத்தி வந்தோம். ஆனால் அந்த விதியை பாஜக அரசு எடுத்துள்ளது. இதன் நோக்கம் என்ன.? காங்கிரஸ் உங்களுடன் இருக்கும். அவர்கள் உங்களது நிலத்தை எடுத்தால் அந்த இடத்தில் நாங்கள் இருப்போம், உங்களுக்காகப் போராட. நான் வருவேன் போராடுவதற்கு என்றார் ராகுல் காந்தி.
No comments:
Post a Comment