மைசூருவில் உள்ள கல்லூரி தங்கும் விடுதியில் மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிவைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
மருத்துவ மாணவி தற்கொலை
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுவாதி (வயது 22). இவர் மைசூரு பன்னிமண்டபாவில் உள்ள ஜே.எஸ்.எஸ். மடத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் ‘பி‘ பார்மசி 3–வது ஆண்டு படித்து வந்தார். இதனால் அவர் கல்லூரிக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆனபோதிலும் சுவாதி தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சகமாணவிகள், சுவாதி தங்கியிருந்த அறையின் கதவை தட்டிப்பார்த்துள்ளனர். இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது சுவாதி தனது அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
பிரேதப் பரிசோதனை
இதை பார்த்து அதிர்ச்சி சக மாணவிகள் கதறி அழுதனர். மேலும் இதுகுறித்து என்.ஆர்.மொகல்லா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் தூக்கில் தொங்கிய சுவாதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஜே.எஸ்.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உருக்கமான கடிதம் சிக்கியது
மேலும் சுவாதி எழுதிவைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
எனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. இந்த கல்லூரியிலும் படிக்கும் மாணவ–மாணவிகளுடன் என்னால் அனுசரித்து செல்ல முடியவில்லை. எனது செல்போனுக்கு தினமும் புதிய புதிய செல்போன் எண்களில் இருந்து ஆபாச குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்.) வருகின்றன.
இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி மற்றும் தோழிகள் என்னை மன்னித்துவிடுங்கள். எனது முடிவு மூலம் உங்களுக்கு பெரிய துயரத்தை கொடுத்துவிட்டு செல்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து என்.ஆர்.மொகல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment