தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியால் உலகின் எந்த மூளையில் ஒருவர் இருந்தாலும் அவருடன் தொடர்பு கொண்டு பேசக்கூடிய வாய்ப்பு இப்போது உள்ளது.
இணையதளம், செல்போன், இ.மெயில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். என பல்வேறு தொழில்நுட்பம் மூலம் தகவல்களை படத்துடன் பரிமாறிக்கொள்ளும் நிலை உள்ளது. இதற்கு ஒருபடி மேலாக ‘வாட்ஸ்அப்’ என்னும் நவீன தகவல் தொழில் நுட்பம் தற்போது உலகம் முழுவதையும் கைக்குள் கட்டிப்போட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சாதாரண டெலிபோன் (தரைவழி)களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டன. ஒரு காலத்தில் டெலிபோன் வசதி வைத்திருக்கும் குடும்பத்தினரே செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டனர்.
ஆனால் செல்போன் எப்போது வந்ததோ அதில் இருந்து டெலிபோன்களுக்கு மவுசு குறைந்தது. பன்னாட்டு கட்டணம், வெளி மாநில கட்டணம் என பல்வேறு நிலைகளில் டெலிபோன் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
காலப்போக்கில் செல்போன் கிராமங்கள் வரை சென்றடைந்ததை தொடர்ந்து தரைவழி டெலிபோன்கள் காணாமல் போய் விட்டது.
இதற்கிடையில் தொலை தொடர்புத்துறையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு போட்டியாக பல தனியார் நிறுவனங்களும் களம் இறங்கியதால் கடுமையான போட்டி ஏற்பட்டது.
நிறுவனங்களுக்கு இடையே போட்டி போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதால் டெலிபோன்கள் பயன்பாடு படிப்படியாக குறைந்தது.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான டெலிபோன் இணைப்புகள் கடந்த 10 வருடத்தில் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் 2 கோடியே 80 லட்சம் தரைவழி டெலிபோன்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 13 லட்சத்து 60 ஆயிரம் பி.எஸ்.என்.எல். டெலிபோன்கள் பயன்படுத்தப்படுகிறது.
நாளுக்கு நாள் டெலிபோன் சரண்டர் அதிகரித்து வந்ததால் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அவற்றை தடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார்கள்.
மேலும் இதனால் பி.எஸ்.என்.எல். வருவாயும் கணிசமாக குறைந்தது. இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்பவர்கள் தான் பெரும்பாலும் பி.எஸ்.என்.எல். டெலிபோனை பயன்படுத்துகின்றனர். தவிர வணிக பிரமுகர்கள் வர்த்தக பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட அளவு தரை வழி டெலிபோனை உபயோகப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் டெலிபோன் சரண்டர்களை தடுக்கும் வகையில் ஒரு அதிரடி திட்டத்தை பி.எஸ்.என்.எல். மே 1–ந் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதுவரையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.
பி.எஸ்.என்.எல். டெலிபோனில் இருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு தர திட்டமிட்டுள்ளது.
இது தரைவழி போனில் இருந்து பி.எஸ்.என்.எல். செல்போன், தரைவழி போன் மற்ற தனியார் நிறுவனங்களின் செல்போன், தரைவழி போன்களுக்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக பேசலாம்.
இந்தியாவிற்குள் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் குறிப்பிட்ட இந்த நேரத்தில் இலவசமாக பேசும் வசதியை தர இருக்கிறது. இதன் மூலம் தற்போது உள்ள டெலிபோன் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதோடு மட்டுமின்றி புதிதாக சேர்க்கவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சலுகை திட்டம் மே 1–ந் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.
தற்போது உள்ள அனைத்து தரைவழி சந்தா தாரர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்–க்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த திட்டம் பி.எஸ்.என்.எல்.க்கு புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தரும் என்று நம்புகிறோம் என்றார்.
No comments:
Post a Comment