தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் 5–ந்தேதி தொடங்கி 31–ந்தேதி வரை நடை பெற்றது. அந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
இந்த ஆண்டு கணிதம், வேதியியல், உயிரியல் தேர்வுகள் மிகவும் கடினமாக இருந்தன என்று மாணவர்கள் தெரிவித்தனர். நன்றாக படிக்க கூடிய மாணவர்களே வேதியியல் மற்றும் உயிரியல் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என்று கண்ணீர் விட்டனர்.
இதனால் 200–க்கு 200 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மருத்துவ கட்ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் 67 மையங்களில் நடந்த விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துள்ளது. மதிப்பெண்கள் குறுந்தகடில் பதிவு செய்து சென்னையில் உள்ள டேட்டா மையத்திற்கு அனுப்பப்படுகிறது.
அதனை தொடர்ந்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண் பாட வாரியாக பதிவு செய்யும்பணி நாளை (திங்கட்கிழமை) முதல் நடை பெறுகிறது. இந்த பணிகள் 10 நாட்களுக்கும் மேலாக இரவு பகலாக நடைபெறும்.
மதிப்பெண் விவரங்கள் மே 1 அல்லது 2–தேதிக்குள் பதிவு செய்து தேர்வு முடிவு வெளியிடுவதற்கு தயாராகி விடும்.
அதனால் மே 9–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 9–ந்தேதி சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 7–ந்தேதி அன்று வெளியிடவும் ஆலோசிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே 9–ந்தேதி பிஸஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. எனவே 9–ந்தேதியோ அல்லது அதற்கு முன்னதாக 7–ந்தேதியோ தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment