டெல்லி: கட்சிக்குள் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருங்கள், பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் வெளிநாடு வாழ் இந்திய ஆதரவாளர்கள் கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க முயல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் வெளிநாடு வாழ் இந்திய ஆதரவாளர்கள் கட்சி ஒற்றுமையுடன் இருக்க வேண்டி சமூக வலைதளங்களில் #UnitedAAP என்ற பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, கத்தார், கென்யா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, ஓமன், சிங்கப்பூர், குவைத், சவுதி, ஹாங்காங், ஐக்கிய அரபு ஆமீரகம் என்று 32 நாடுகளில் வாழும் இந்தியர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதம் ஒன்று கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, பெரிய அமைப்பில் கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். ஆனால் இந்த கருத்து வேறுபாடு பிரச்சனையில் சிக்கியுள்ளவர்கள் கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுபவர்கள் என்று நம்புகிறோம். அதனால் அவர்கள் ஊழல் போன்ற பெரிய பிரச்சனைகளை தீர்க்க ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அனைத்து தலைவர்களும் சேர்ந்து தான் கட்சியை உருவாக்கி இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். அதனால் கட்சி வலுவுடன் இருக்க வளர அவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அட்மிரல் ராமதாஸின் பரிந்துரைகளை மறுஆய்வு செய்து அமல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஜனநாயகம் பற்றி வரும் கருத்துகளை தலைவர் கேட்டு அதற்கு பதில் அளிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கட்சியின் லோக்பால் அதிகாரியான அட்மிரல் ராமதாஸ் தேசிய செயற்குழுவுக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment