எப்பவுமே ஆளுங்கட்சிக்கு மார்க் போட்டு பழக்கப்பட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். காரணம் என்னவெனில் ஜெயலலிதா வழிகாட்டுதல் படி நிதிநிலை அறிக்கையை தயாரித்தது அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறிய செயல் என்பதால் அவரை தகுதிநீக்கம் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார் ராமதாஸ்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டப் பேரவையில் 2015-16 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தமது உரையில் மொத்தம் 151 முறை ‘அம்மா' புகழ் பாடி தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி கொண்டார். அதையும் தாண்டி அவர் கூறிய சில கருத்துக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதற்கு சமமானவையாகும்.
அம்மா வழிகாட்டினாரா?
நிதிநிலை அறிக்கையை முழுமையாக வாசித்து முடித்த பன்னீர்செல்வம், தமது உரையின் முடிவில், ‘‘போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா மேற்பார்வையில்
இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி தான் அமைக்கப்பட்டுள்ளது என்றால், நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்குத் தேவையான அரசின் கோப்புகளும், புள்ளி விவரங்களும் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டன; அவற்றை ஆய்வு செய்த ஜெயலலிதா நிதிநிலை அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இடம் பெற வேண்டும்; எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார்; அதன் அடிப்படையில் தான் இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தான் பொருளாகும்.
அரசியல் அமைப்புச் சட்டவிதி
இது இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறிய செயல் ஆகும். தமிழ்நாட்டின் முதல்வராகவும், அமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164 (3) பிரிவின்படி பதவியேற்பு உறுதிமொழியும், ரகசியக் காப்பு உறுதி மொழியும் ஏற்க வேண்டியது கட்டாயமாகும். இந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆளுநரின் முன்னிலையில்,‘‘தமிழ்நாட்டு மாநில அமைச்சர் என்ற முறையில் எனக்குத் தெரியவரும் அல்லது எனது பரிசீலனைக்காக வரும் எந்த விஷயத்தையும், அமைச்சர் என்ற முறையில் எனது கடமைகளை ஆற்றுவதற்காகத் தவிர வேறு எதற்காகவும் யாருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்க மாட்டேன் என்று கடவுளின் பெயரால் (அல்லது உளமாற) உறுதியேற்கிறேன்'' என உறுதிமொழி ஏற்கிறார்கள்.
தகுதியை இழந்துவிட்டனர்
இவ்வாறு முதல்வர் மற்றும் நிதியமைச்சர் என்ற முறையில் தாம் கையாள வேண்டிய கோப்புகளை ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு சென்று, அவற்றை ஆய்வு செய்து அவர் அளித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பதன் மூலம் ரகசியக் காப்பு உறுதி மொழியையும், இந்திய அரசியலமைப்புச் சட்டவிதிகளையும் பன்னீர்செல்வம் மீறிவிட்டார்; முதல்வர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
ஜெயலலிதா உடன் சந்திப்பு
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகு, தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை போயஸ் தோட்ட இல்லத்தில் பல முறை சந்தித்து பேசியுள்ளனர்.
ஊழல் குற்றவாளி
முதல்வரும், அமைச்சர்களும் அதிமுகவின் நிர்வாகிகள் என்ற முறையில் அந்த கட்சியின் பொதுச்செயலாளரை சந்தித்து பேசுவதை குறை கூற முடியாது. ஆனால், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், ஆலோசகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் எந்த அடிப்படையில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவை சந்தித்து அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்? இதை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எப்படி அனுமதிக்கிறார்.
சட்ட மீறல்
இதற்கெல்லாம் மேலாக தமிழக அரசின் முக்கியக் கோப்புகள் அனைத்தும் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரது ஒப்புதலுக்குப் பிறகு தான் அவற்றில் முதல்வர் பன்னீர்செல்வம் கையெழுத்திடுவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையென்றால் இதுவும் அப்பட்டமான அரசியலமைப்பு சட்ட விதி மீறல் ஆகும்.
நல்ல முதல்வரா?
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர் உடனடியாக அரசு நிர்வாகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டால், அந்த நிர்வாகம் ஊழல் மலிந்ததாகத் தான் இருக்கும் என்ற என்ற அடிப்படையில் தான் இப்படி ஒரு பிரிவு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஊழல் குற்றவாளியில் வழிகாட்டுதலை பின்பற்றுவது மட்டுமல்ல... அவ்வாறு கூறுவதே தவறு தான். ஊழல்வாதியை பின்பற்றுபவர் எப்படி நல்ல முதல்வர் இருக்க முடியும்?
நீதித்துறையில் தலையீடு
நிதிநிலை அறிக்கை உரையின் இன்னொரு இடத்தில்,‘‘மீண்டும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதல்வராக பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை'' என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
கண்டிக்கத்தக்கது
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விடுதலை ஆவார் என்ற பொருளில் ஒரு மாநிலத்தின் முதல்வர் பேசுவது நீதித்துறையில் செய்யும் தலையீடு ஆகும். இது கண்டிக்கத்தக்கது.
பதவி நீக்கம் செய்யுங்கள்
இந்திய நிர்வாக முறையின் புனித நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான். அந்த சட்டத்தையும், அதன் அடிப்படையில் ஆளுநர் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட ரகசியக் காப்பு உறுதிமொழியையும் ஓ.பன்னீர்செல்வம் மீறிவிட்ட நிலையில் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது முறையல்ல. எனவே, அவரையும், அவரது அமைச்சரவையையும் பதவி நீக்க மாநில ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
No comments:
Post a Comment