காதல் என்ற பெயரில் இளம்பெண்களிடம் பழகி, அந்தரங்களை வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன; பணம் கொடுக்க முடியாத பெண்கள் தவறான பாதைக்கு சென்று சீரழிவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர பகுதியில், தனிப்படை போலீசார் நடத்தி வரும் அதிரடி சோதனையில், விபசார கும்பல்கள் பிடிப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் பீளமேடு பகுதியில் நடத்திய சோதனையில், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கல்லுாரி மாணவி ஒருவர் மீட்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தன்னை காதலித்த கல்லுாரி மாணவர் ஒருவர் அந்தரங்களை வீடியோ எடுத்ததாகவும், காதல் முறிந்த பின், அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டியதால், விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், விபசாரத்தில் ஈடுபட்டு சிக்கிய ஆசாமி ஒருவனிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், காதலிப்பது போல் கல்லுாரி மாணவிகளிடம் பழகி, அவர்களது அந்தரங்களை வீடியோ எடுத்து வந்தது தெரியவந்தது. அந்த வீடியோ காட்டி பணம் பறித்ததும், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் கல்லுாரி மாணவிகள் தவறான வழிகளை தேர்ந்தெடுக்கவும், தற்கொலை போன்ற துயர மான முடிவுகளை எடுக்கவும் வழிவகை செய்கிறது.
சமீபத்தில், ‘வாட்ஸ்அப்’பில், திருமணமாகாத தனியார் கல்லுாரி பேராசிரியை ஒருவரின் ஆபாச போட்டோக்கள் உலா வந்தன. இவரை காதலித்த மாணவர் ஒருவர், அந்த போட்டோக்களை, ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியது, விசாரணையில் தெரியவந்தது. இதையறிந்ததும் குறிப்பிட்ட பெண், திடீரென மாயமானார். அவரின் நிலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.காதல் என்ற பெயரில் ஏமாறும் பெண்கள், இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கும்போது, தவறை உணர்ந்து பெற்றோரிடம் தெரிவிப்பதே நல்லது என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘காதல் என்ற பெயரில், பெண்களை ஏமாற்றி ‘வீடியோ’ எடுத்து பணம் பறிக்கும் புகார்கள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. இதை தங்களுக்கு சாதகமாக கருதும் மோசடி நபர்கள், பெண்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கும் பெண்கள், மோசடி நபர்களுக்கு அடிபணிவதை காட்டிலும், தங்களது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு சரணடையலாம். இதனால், பெண்கள் தவறான வழிகளுக்கு செல்வதை தவிர்க்கலாம். புகார் அளிக்கப்பட்டால், ரகசிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
No comments:
Post a Comment